தமிழனின் கீழடியில் கிடைத்த பொருள்களை வைத்து தமிழ் கலாச்சாரம் இந்தியாவிலேயே மூத்தது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் வெளியானது. இது குறித்து தொல்லியல் துறை சார்பில் ஒன்றிய அரசுக்கு அறிக்கைகளும் அனுப்பப்பட்டது.
ஆனால், இதனை அங்கீகரிக்காமல் கீழடி குறித்த தரவுகளுக்கு கூடுதல் ஆதாரங்கள் வேண்டும் என்று கூறி, ஒன்றிய அரசு அந்த அறிக்கையை திரும்பி அனுப்பியது. இது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்கு “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று பதில் கூறியிருந்தார்.
இந்நிலையில், கீழடி ஆய்வு குறித்தும், அதன் தொன்மை குறித்து விரிவான கட்டுரை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "கீழடி அகழ்வாராய்ச்சிகள் குறித்து சர்வதேச ஆய்வகங்களிலிருந்து கார்பன் கார்பன் டேட்டிங் ஆதாரங்களும் AMS (Accelerator Mass Spectrometry) அறிக்கைகள் வந்தபோதிலும் ஒன்றிய பாஜக அரசு கூடுதல் ஆதாரங்களை கேட்கிறது.
ஆனால், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாத போதிலும்,வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் சரஸ்வதி நாகரிகத்தை பாஜக தொடர்ந்து ஊக்குவிக்கிறது. அதே நேரம் பல்வேறு தரப்பிலும் நிருபிக்கப்பட்ட தமிழ் கலாச்சாரத்தின் தொன்மையை நிராகரிக்கின்றனர்.நமது வரலாற்றை வெளிக்கொணர பல நூற்றாண்டுகளாக நாங்கள் போராடினோம். அதை அழிக்க அவர்கள் ஒவ்வொரு நாளும் போராடி வருகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.