மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் 1970-களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய சிரிய அதிபராக பஷார் அல் அசாத் இருந்து வருகிறார்.
இவரின் இந்த அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு சிரியாவின் பல பகுதிகளில் கிளர்ச்சி ஏற்பட்டது. நாட்டின் வடக்கு பகுதிகளில் குர்து பிரிவினரும், சன்னி பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.
எனினும் அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசுக்கு ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் ரஷ்ய ராணுவத்தின் ஒரு பகுதி சிரியாவில் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக இருந்து வந்தது. இதனால் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் தடைபட்டது.
இதனிடையே உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை பயன்படுத்தி சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக திடீர் தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போ கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.
அதனைத் தொடர்ந்து முக்கிய நகரான கோம்மும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமஸ்கஸ் நகரை நோக்கி முன்னேறி வந்தனர். இந்த நிலையில், சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் நகரை கைப்பற்றியதாகவும், அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனவும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்தநிலையில், இது அந்த நாடுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.