
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 127 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் நேற்று இரவு நேரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பயந்து போன மக்கள், அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.

சுமார் 6.2 என்ற ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் அங்கிருக்கும் பல ஆயிரம் கட்டடங்கள் சேதமாகியுள்ளது. அதில் சுமார் 5 ஆயிரம் கட்டடங்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பலரும் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அதோடு இதுவரை சுமார் 127 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 2 மாகாணங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சீனாவின் வடமேற்கு பகுதியான சின்ஜியாங் பகுதியில் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆண்டு இறுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் சீனாவில் தற்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது.








