பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆக்சிடென்டல் மாகாணத்தில் உள்ள கலம்பா என்ற நகரை சேர்ந்தவர் ஜுவான் ஜுமலன். இவர் தனது வீட்டிலேயே வானொலி நிலையம் ஒன்றை அமைத்து அதனை செயல்படுத்தி வருகிறார். இவரின் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்துள்ளனர்.
இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த படி நிகழ்ச்சி ஒன்றில் லைவ்வாக பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் ஜுவான் ஜுமலனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜுவான் ஜுமலன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் முழுக்க பேஸ்புக் லைவில் ஒளிபரப்பான நிலையில் இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும் சில மணி நேரங்களில் இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த விடியோவில், அந்த நபர் ஜுவான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறிக்க முயன்றது பதிவாகியுள்ள நிலையில், திருட்டுக்காக இந்த சம்பவம் நடைபெற்றதா என போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து பேசிய லிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் , "பத்திரிகைச் சுதந்திரத்தை அச்சுறுத்துபவர்கள், அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும், கொலையாளிகளைக் கண்டுபிடித்து, கைதுசெய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.