உலக அளவில் பொம்மைகளுக்கு மவுசு அதிகம். அதிலும் பேய் பொம்மையாக கருதப்படுபவைகளுக்கு மேலும் அதிகம். அனெபெல் பொம்மை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் 'சக்கி' (chucky) என்று சொல்லப்படும் பொம்மைக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இது பேய் பொம்மையாக பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களில் வரும் இந்த பொம்மையானது அனைவரையும் பயமுறுத்தும் வகையில் இருந்தாலும், இதன் மேல் பலருக்கும் விருப்பம் உள்ளது. 'chucky' என்ற பெயரில் இந்த படத்தின் பல பாகங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் இந்த பொம்மையை வைத்து பொதுமக்களையே அச்சுறுத்தி வந்த நபரையும், இந்த பொம்மையையும் மெக்சிகோ போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் கோஹுயிலா மாகாணத்தில் அமைந்துள்ளது மான்க்லோவா என்ற நகரம். இங்கு கடந்த சில வாரங்களாகவே பொம்மையை வைத்து நபர் ஒருவர் சாலையில் செல்வோரை பயமுறுத்தி பணம் பறித்து வந்துள்ளார். மேலும் அந்த நபர் சாலையில் செல்வோர் மீது அந்த பொம்மையை வீசி அச்சுறுத்தல் செய்தும் வந்துள்ளார்.
இதனால் இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அதில் தொடர்புடையவரை கண்டறிந்தனர். அந்த நபர் பெயர் கார்லோஸ் என்றும், அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கார்லோஸை அதிரடியாக போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த அந்த பொம்மையை கைப்பற்றினர்.
ஆனால் அந்த பொம்மை கையில் கத்தியும் இருந்ததால், அதனை பறிமுதல் செய்வதற்கு பதிலாக அதனையும் கையில் விலங்கு மாட்டி போலீசார் கைது செய்தனர். அதோடு உள்ளூர் நிருபர்கள் சிலர் விளையாட்டுத்தனமான அந்த பொம்மைக்கு கைவிலங்கு போடுமாறு கூறியதாலும், அந்த பொம்மை கையில் விலங்கு மாட்டி தூக்கி சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. தற்போது அந்த அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் பொம்மைக்கு கைவிலங்கு மாட்டி தூக்கி சென்ற சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த 'சக்கி டால்' 1988- ல் வெளியான 'Child's Play' என்ற ஹாரர் படத்தில் அறிமுகமானது. தொடர்ந்து இந்த பொம்மை கதாபாத்திரம் அடுத்தடுத்த படங்களில் தோன்றி மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.