தமிழ்நாடு

“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

திருநெல்வேலி அருகே 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அண்மைக்காலத்தில் அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி அருகே 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தினை திறந்து வைத்தார்.

பொருநை அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக்கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டடத் தொகுதிகள் 54,296 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டடத் தொகுதிகளும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடத்தின் முகப்புகளிலும் உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன.

இவற்றுடன் கண்கவர் நீர்த்தடாகம், நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்தவெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,

“தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம், காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது.

மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் திராவிட மாடல் அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம் - உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயர்ந்து ‘முன் செல்லடா...’ என நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக பொருநை அருங்காட்சியகம் அமையும் என நம்பித் தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன்.

கீழடி, பொருநை அருங்காட்சியங்களைத் திறந்து வைத்ததன் மூலம், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், தமிழினத்தின் தலைமை இயக்கமான திமுகவின் தலைவராகவும், ஒரு தமிழராகவும் பெருமை அடைகிறேன்.”

banner

Related Stories

Related Stories