தமிழ்நாடு

நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.56.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வைத்தார்.

நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அண்மைக்காலத்தில் அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில்  திருநெல்வேலி அருகே 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தினை திறந்து வைத்தார்.

திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ், 9.9.2021 அன்று, “இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு,  இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நிறுவுவதே தமிழ்நாடு அரசின் தலையாயக் கடமை என்றும், சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்த அரியப் பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக திருநெல்வேலி நகரில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்படும்” எனவும் அறிவித்தார்.  

இந்த அறிவிப்பினை செயல்படுத்திட ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொருநை அருங்காட்சியத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு 18.05.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

பொருநை அருங்காட்சியகம் திறப்பு

தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையைப் பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின்  தொட்டிலாகக் கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககால பாண்டியரின் துறைமுகமான கொற்கை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற அரிய தொல்பொருட்களை ஒரே இடத்தில் பொருநை ஆற்றங்கரை நாகரிகம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் சிறப்பாக தொல்பொருட்களை காட்சிப்படுத்தி  நவீன வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர், பொருநை அருங்காட்சியகத்தின் அறிமுக கட்டடம், சிவகளை காட்சி அரங்கில் இரும்பின் தொன்மை காட்சிக்கூடம், முதுமக்கள் தாழி காட்சிக்கூடம், வாழ்விட பகுதி காட்சிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.

நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!

பொருநை அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக்கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டடத் தொகுதிகள் 54,296 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டடத் தொகுதிகளும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடத்தின் முகப்புகளிலும் உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன.   

இவற்றுடன் கண்கவர் நீர்த்தடாகம்,  நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்தவெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே  மரங்கள், குறுஞ்செடிகள்,  குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சிவகளை

சிவகளை தொல்லியல் தளத்தில் 2019–ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில்  ஈமத்தாழிகள், உயர் வெண்கலத்தாலான கலன்,  இரும்பாலான கருவிகள், படையல் கலன்கள், பலவண்ண மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என  பல்வேறு வகையான தொல்பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. 

சிவகளை தொல்லியல்  அகழாய்வில் ஈமத்தாழி ஒன்றில் சேகரிக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளை 2021-ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் மியாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற பீட்டா அனலடிக் ஆய்வுக்கூடம் (Beta Analytics Laboratory) வாயிலாக, காலக் கணக்கீடு செய்ததில், இதன் காலம் கி.மு.1155 என்று கண்டறியப்பட்டுள்ளது.  இக்காலக்கணக்கீடு வாயிலாக  பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினர் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் பயிரிட்டுள்ளனர் என்று அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூரில் 2019 முதல் 2021 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் ஆதிச்சநல்லூரின் வரலாற்றை மறுகட்டமைக்க உதவுகிறது.  ஆதிச்சநல்லூரில் இரும்புக் காலத்திற்கு முன்னும் பின்னும் வாழ்ந்த மக்களின் வரலாற்றை வெளிப்படுத்தியுள்ளது. கற்காலத்தைச் சார்ந்த நுண்கற்காலக் கருவிகள் கிடைத்திருப்பதன் மூலம் இங்கு இரும்புக் காலத்திற்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. 

மேலும், முதுமக்கள் தாழிகள், இரும்பாலான கருவிகள், படையல் பானைகள், மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் இரும்புக் காலத்தைத் தொடர்ந்து தொடக்க வரலாற்றுக் காலத்திலும் மக்கள் இங்கு வாழ்ந்திருப்பதை, உறுதி செய்கின்றன. 

நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!

ஆதிச்சநல்லூரில் அன்றைய நீர் மேலாண்மையை எடுத்துரைக்கும் வகையில் 21 எண்ணிக்கை கொண்ட சுடுமண்ணாலான உருளைக்குழாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கிடைக்கப்பெற்றுள்ள அதிக அளவிலான உயர்தர  வெண்கலம் மற்றும் தங்கத்தினாலான பொருட்கள் தமிழ்ச் சமூகத்தின் வளமான பொருளாதாரத்தினையும் சமூக நிலையையும் பிரதிபலிக்கின்றன.  

தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மை

சிவகளையில் இரும்புப் பயன்பாடு கி.மு.3300-க்கும், ஆதிச்சநல்லூரில் கி.மு.2613-க்கும் கொண்டு சென்றதை அறிவியல் அடிப்படையிலான காலக்கணக்கீடுகள் எடுத்துரைக்கின்றன.  எனவே, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல் துணைகொண்டு நிறுவப்பட்டுள்ளது.

துலுக்கர்பட்டி

திருநெல்வேலி அருகே உள்ள துலுக்கர்பட்டியில் 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில்  வெள்ளி முத்திரையிடப்பட்ட நாணயம், தந்தத்தினால் ஆன  பொருட்கள், கண்ணாடி (ஆடி) மணிகள், சுடுமண் மணிகள், சூதுபவளம், அகேட், செவ்வந்தி, பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட அரிய கல்மணிகள், பல்வேறு வகையான இரும்புப் பொருட்கள், சுடுமண்ணால் ஆன உருவங்கள் மற்றும் சக்கரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன.  இவற்றோடு ஏறத்தாழ 5000 - க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது சிறப்பாகக்  கருதப்படுகிறது.  

கொற்கை

கொற்கை பாண்டியர்களின் தலைநகரமாகவும் துறைமுகமாகவும் செயல்பட்டிருந்ததை மெய்ப்பிக்கும் வகையில் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் ஏராளமாக கிடைக்கின்றன. மேலும், வெளிநாட்டார் பயணக்குறிப்புகளும் கொற்கை துறைமுகத்தைப் பற்றி கூறுகின்றன. கொற்கையில் 1968-1969 மற்றும் 2020-2021 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்ணாடி (ஆடி) மணிகள், கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள்;

சுடுமண் மணிகள், அரிய கல்மணிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் உருவங்கள், இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள், சுடுமண்ணால் செய்யப்பட்டு துளையிடப்பட்ட குழாய்கள், சங்க கால செப்புக் காசுகள், ரோம் நாட்டு அரிட்டன் வகை பானை ஓடுகள் மற்றும் சீனநாட்டு செலடன் வகை பானை ஓடுகள், வெள்ளி முத்திரை காசுகள், வடக்கத்திய மெருகூட்டப்பட்ட கருப்பு நிற பானை ஓடுகள், கங்கைச் சமவெளியைச் சார்ந்த கருப்பு நிறப் பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகள் என பல்வேறு தொல்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கொற்கை கி.மு. 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே துறைமுகமாக செயல்பட்டிருந்தது என்பதை முந்தைய அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கரிமப் பகுப்பாய்வுகளின் காலக் கணக்கீடு முடிவுகளின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்

தமிழ்நாட்டின் தொன்மை மற்றும்  வரலாற்றினையும்  சிவகளை, ஆதிச்சநல்லூர், துலுக்கர்பட்டி மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் 15 நிமிட ஒளி-ஒலிக் காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது. 

நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!

5300 ஆண்டுகளுக்கு முன்னர் உலையில் இட்டு இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தோன்றியது என்பது அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றினை விளக்கும் வகையில்  இரும்பு உருக்குதல் செயல்முறை நேரடிக் காட்சி மற்றும் மாதிரி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிந்துவெளிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தும் குறியீடுகள், பண்பாட்டுக்கூறுகள், தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சிகள் ஆகியவை ஒப்பீட்டுடன் விளக்கப்பட்டுள்ளன. 

கொற்கைத் துறைமுகத்தில் கடல்வழி வணிகம் சிறப்புற்றிருந்தது.  அயல்நாட்டு வணிகர்களுடன் தமிழர்கள் மேற்கொண்ட ஏற்றுமதி–இறக்குமதி வணிகத்தின்  சிறப்பைக் கண்முன்னே கொண்டு வரும்வகையில் இரண்டு கலன்களின்  மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் நிலங்களின் தனிச்சிறப்பை உணர்வு பூர்வமாக அனுபவிக்கச் செய்யும் ஓர் பயணமாக, ஐந்திணைகள் ஐந்து பரிமாண வடிவில் (5D) பொதுமக்கள் உவகையுடன் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகங்கள் சேகரிப்பிலிருந்து அலெக்ஸாண்டர் ரீ அவர்களால் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கற்கருவிகள், சங்கினாலான பொருட்கள் தயாரித்தல், இரும்பு உருக்குதல் போன்ற அறிவியல்–தொழில்நுட்ப முறைகளும், நீர் மேலாண்மை, வணிகப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிவகளை, ஆதிச்சநல்லூர், துலுக்கர்பட்டி மற்றும் கொற்கை ஆகிய தொல்லியல் தளங்களின் வரைபடங்களும் தொல்பொருட்களும் அவற்றின் முக்கியத்துவத்தையும், பொருநை  ஆற்றங்கரை நாகரிகத்தின் தனிச்சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன. 

பொருநை ஆற்றங்கரையில்  வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கைமுறை, பண்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை இங்குள்ள ஓவியங்கள் உயிர்ப்புடன் கண்முன் காட்டுகின்றன.

தொடுதிரை, மெய்நிகர் காட்சிகள், ஒளி–ஒலி நிகழ்படங்கள், ஆவணப் படங்கள், உயிரூட்டுக் காட்சிகள், மாதிரி வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையையும் தொடர்ச்சியினையும் எதிரொளிக்கும் வகையில் பொருநை அருங்காட்சியகம் உலகத் தமிழரை மட்டுமின்றி  அனைத்து தரப்பினரையும்  ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories