உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன் பின்னர் ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் தற்போது ட்விட்டரை விட்டு பலர் வெளியேறி வருவதாக கூறப்பட்டது. இப்படி வெளியேறும் பயனர்களை ஈர்க்க ட்விட்டரின் போட்டி நிறுவனங்கள் பல தொடர்ந்து முயன்று வருகின்றன.
அந்த வகையில், ட்விட்டரின் நீண்ட நாள் போட்டியாளரான மெட்டா நிறுவனம் ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை நேற்று அறிமுகப்படுத்தியது. அறிமுகமாகி ஏழு நிமிடங்களில் சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த 'Threads' செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் புதிய கணக்காளர்களாக சேர்ந்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அதிவேகமாக 10 மில்லியன் பயனர்களை கொண்ட செயலி என்ற பெருமை 'Threads' பெற்றுள்ளது. இதன் மூலம் இது விரைவில் எலான் மஸ்க்கின் ட்விட்டருக்கு போட்டியாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், தங்கள் செயலியை பிரதி எடுத்து புதிய செயலியை உருவாக்கியுள்ள 'Threads' செயலி மீது வழக்கு தொடரவுள்ளோம் என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து ட்விட்டர் நிறுவனம் மெட்டா நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த கடிதத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே மெட்டா நிறுவனம், ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை பணியில் சேர்த்து, அதன்மூலம் ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள், மற்ற ரகசிய தகவல்களையும் பயன்படுத்தி, 'Threads' செயலியை உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ட்விட்டரை அப்படியே பிரதி எடுத்தது போல 'Threads' செயலியைஉருவாக்கியிருப்பதாகவும், இதை தெரிந்தே மெட்டா செய்துள்ளதால், அதன்மீது வழக்கு தொடர உள்ளோம் என்றும் கூறியுள்ளது. ஆனால், இதனை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது. இதனிடையே ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்,"போட்டி இருப்பது சரி. ஆனால், ஏமாற்றுவது சரியல்ல" என ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.