உலகம்

22 பிரதமர்களை கண்ட பாகிஸ்தான்.. ஒருவர் கூட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யாத சோகம் - பாக். ‘பகீர்’!

பாகிஸ்தானில் இதுவரை பொறுப்புக்கு வந்துள்ள அத்தனை பிரதமர்களுமே முழுமையாக ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யமுடியாத சோகம் இப்போதும் தொடர்கிறது.

22 பிரதமர்களை கண்ட பாகிஸ்தான்.. ஒருவர் கூட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யாத சோகம் - பாக். ‘பகீர்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பாகிஸ்தான் இதுவரை கண்டிருக்கும் பிரதமர்களில் யாருமே 5 ஆண்டு பதவிகாலத்தை நிறைவு செய்ததில்லை. முதல் பிரதமரில் ஆரம்பித்த இந்தச் சோகம் இன்று வரை தொடர்கிறது.

பாகிஸ்தானில் எந்தப் பிரதமரும் முழுமையாக பதவி வகித்ததில்லை. பாதியிலேயே ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். அல்லது ராணுவப் புரட்சி நடந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி விடும்.

1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது, மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற லியாகத் அலிகான் பிரதமராக பதவி ஏற்றார். இந்தியா மீது போர் தொடுக்க மறுத்ததால் ராவல்பிண்டியில், 1951 அக்டோபர் 16ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்குப் பின்னர் பாகிஸ்தான் 7 ஆண்டுகளில் கவாஜா நசிமுதீன், முகமது அலி போக்ரா, சவுத்ரி முகமது அலி, ஹுசைன் சஹீத் சுரதி, இப்ராகிம் இஸ்மாயில் சந்திரிகர், பெரோஷ் கான் நூன் என 6 பிரதமர்களைக் கண்டது.

பின்னர் 1958 முதல் 1971 வரை நாடு ராணுவ ஆட்சிக்கு சென்றது. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானின் 8வது பிரதமராக பதவியேற்ற நூருல் அமின் 13 நாட்களே அந்த பதவியில் இருந்தார். பாகிஸ்தானில் குறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவர் இவர்தான்.

பின்னர் 1973 ஆகஸ்ட் மாதம் பிரதமரான ஜூல்பிகர் அலி பூட்டோ, பிரதமராக 4 வருடங்களை நிறைவு செய்யவிருந்த நிலையில் மீண்டும் ஆட்சி ராணுவத்தின் வசமானது. 1977 முதல் 1988 வரையில் ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில், மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய 1999 வரையில் 5 பிரதமர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற முகமது கான், பெனாசிர் பூட்டோ, நவாஸ் ஷெரீப் என யாரும் 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை.

22 பிரதமர்களை கண்ட பாகிஸ்தான்.. ஒருவர் கூட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யாத சோகம் - பாக். ‘பகீர்’!

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் பெனாசிர் பூட்டோ. பிரதமராக இவர் பதவிவகித்த 2 முறையும் முழுமையாக தனது பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை. பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது படுகொலை செய்யப்பட்டார்.

ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில், 2012 ஆண்டு முதல் 2018 நாடாளுமன்ற தேர்தல் வரையில் 7 பேர் பிரதமர் பொறுப்பேற்றனர். ஜபருல்லா கான் ஜமாலி, சவுத்ரி ஹுசைன், சௌகாட் அஜிஜ், யூசுப் ராசா கிலானி, பர்வேஸ் அஸ்ரப், நவாஸ் செரீப், ஷாஹித் ககன் அப்பாசி பிரதமரான நிலையில், யூசுப் ராசா கிலானி மட்டும் 4 ஆண்டுகள் 86 நாட்கள் பிரதமராக பதவியிலிருந்தார்.

கடைசியாக 2018ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த இம்ரான் கானின் பதவியும் தற்போது ஊசலாடுகிறது. 2018ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த இம்ரான் கானும், இப்போது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ய முடியாமல் ஆட்சியிலிருந்து அகற்றப்படும் நிலைக்குச் சென்றுள்ளார். அவர் பிரதமர் பதவியை ஏற்று இன்றுடன் 3 ஆண்டுகள், 223 நாட்கள் ஆகின்றன.

இம்ரான் கான் அரசுக்கு பெரும்பான்மை பறிபோயுள்ளதால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள இருக்கிறார். இதனால் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தானில் அடுத்து என்ன நடக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories