
தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. ஒரே நேரத்தில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது.
இந்நிலையில், தனது நாட்டு மக்களின் நலன் கருதி தனக்கு நடக்கத் இருந்த திருமணத்தை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ரத்து செய்துள்ளார். இது அந்நாட்டு மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். இவருக்கு கிளார்க் கைபோர்டு என்பவருடன் 2019ம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் திருமணம் பிப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தனது திருமணத்தை ஜெசிந்தா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எனது திருமணம் இப்போதைக்கு நடைபெறப்போவதில்லை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. இதுதான் வாழ்க்கை.
எனக்கும் பொதுமக்களுக்கும் எந்த வித்தியாசம் கிடையாது. எல்லோருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் ஒன்றுதான். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்புவோம். இதன்பின் திருமணம் பற்றி யோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.








