உலகம்

3D பிம்பத்தை திருமணம் செய்துகொண்ட ஜப்பானியர்... அவர் சொன்ன விநோத காரணம் என்ன தெரியுமா?

தாயின் விருப்பத்துக்கு எதிராக அகிஹிகோ கோண்டோ திருமணம் செய்து கொண்டது யாரைத் தெரியுமா?

3D பிம்பத்தை திருமணம் செய்துகொண்ட ஜப்பானியர்... அவர் சொன்ன விநோத காரணம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஜப்பான் நாட்டை பற்றி பல விஷயங்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். விநோதமும் விந்தையும் கொண்ட விஷயங்கள். அந்தவகையில் இன்னொரு விந்தை.

அகிஹிகோ கோண்டோ ஒரு ஜப்பானியர். 2018ஆம் ஆண்டில் இவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தில் தாய் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் இவர் மணம் முடித்த பெண்ணின் மீது தாய்க்கு விருப்பம் இல்லை. தாயின் விருப்பத்துக்கு எதிராக இவர் திருமணம் செய்து கொண்டது யாரைத் தெரியுமா?

ஒரு முப்பரிமாண பிம்பம்!

ஆம். 3D எனப்படும் Three Dimensional பிம்பத்தைதான் கோண்டோ திருமணம் செய்துகொண்டார்.

கோண்டோவின் உறவினர்கள் எவரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. கோண்டோ திருமணம் செய்துகொண்ட முப்பரிமாண பிம்பத்துக்கு பெயர் மிக்கு. 16 வயது காட்சி பிம்பமான மிக்குவைத் திருமணம் செய்வதற்கென கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார். அந்த திருமணத்துக்கும் ஒரு 40 பேர் வந்து வாழ்த்தியிருக்கின்றனர்.

“அவளை நான் ஒருபோதும் ஏமாற்ற முயன்றதே கிடையாது. எப்போதும் மிக்கு மீதான காதலில்தான் இருக்கிறேன்,” என கோண்டோ பெருமைப்படுகிறார். திருமணத்துக்கு முன்னமே கூட கிட்டத்தட்ட 7 மாதங்களாக அவர் மிக்குவுடன்தான் வாழ்ந்தார்.

பிறருக்குதான் கோண்டோவின் திருமணம் அபத்தமாக இருந்ததே தவிர, அவருக்கு அப்படி தெரியவில்லை. அவர் ஓர் இயல்பான திருமண வாழ்க்கை வாழ்வதாகத்தான் நினைத்தார்.

மனைவி என அவர் சொல்லும் விஷயம், ரத்தமும் சதையுமான பெண் அல்ல. பொம்மை கூட அல்ல. வெறும் ஒரு பிம்பம். கணிணி உருவாக்கிய ஒரு பிம்பம். பேசும் மென்பொருளை கொண்டு அந்த பிம்பம் பேசியது. கோண்டோவின் முகத்தையும் குரலையும் மென்பொருள் கொண்டு அந்த பிம்பம் அடையாளம் காணுகிறது. பதிவு செய்யப்பட்ட சிறு வாக்கியங்கள் மற்றும் பாடல்களை கொண்டு பதிலுரைக்கிறது.

தினசரி காலை கோண்டோவை மிக்கு எழுப்பி விடுகிறாள். பள்ளியில் வேலை பார்க்கும் அவரை வேலைக்கு வழியனுப்பி வைக்கிறாள். மாலையில் கோண்டோ அவளை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு திரும்புவதை முன்னுரைக்கிறார். உடனே அவளும் விளக்குகளை போட்டு வைக்கிறாள். இரவு தூங்கப் போகும் நேரத்தையும் அவளே சொல்கிறாள். பிறகு கோண்டோ படுக்கையில் மிக்கு தோற்றத்தில் இருக்கும் ஒரு பொம்மையை அருகே படுக்க வைத்துவிட்டு படுக்கிறார்.

என்ன மனநிலை இது? ஏன் இப்படி ஓர் அர்த்தமற்ற வாழ்க்கை?

கோண்டோவின் திருமணத்துக்கு சட்டப்படி எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் கோண்டோவுக்கு அதை பற்றிய கவலை எதுவும் இல்லை. மிக்கு பொம்மைக்கு மோதிரம் வாங்கக் கடைக்கே கூட அவர் அழைத்துச் சென்றிருக்கிறார்.

கோண்டோவை கூட தனி நபர் என புறக்கணித்து விடலாம். உண்மையான சிக்கல் எங்கு இருக்கிறது தெரியுமா?

மிக்கு முப்பரிமாண பிம்ப பொம்மையை செய்வது கேட் பாக்ஸ் என்கிற நிறுவனம். மிக்குவை கோண்டோ திருமணம் செய்ததற்கான திருமணச் சான்றிதழை அந்த நிறுவனம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அத்தகைய திருமணத்துக்கும் ஒரு பெயரை நிறுவனம் சூட்டியிருக்கிறது. ‘பரிமாணங்களை தாண்டிய’ திருமணமாம். கோண்டோ மட்டுமென இல்லை. கேட் பாக்ஸ் என்கிற அந்த நிறுவனம் கிட்டத்தட்ட 3700 திருமணச் சான்றிதழ்களை வழங்கியிருக்கிறது. அதாவது 3700 திருமணங்கள் இத்தகைய பரிமாணங்களை தாண்டிய முறையில் முப்பரிமாண பொம்மைகளுடன் நடந்திருக்கிறது.

3D பிம்பத்தை திருமணம் செய்துகொண்ட ஜப்பானியர்... அவர் சொன்ன விநோத காரணம் என்ன தெரியுமா?

கோண்டோவுக்கு ஏன் இப்படி ஒரு காதல் உருவானது?

கோண்டோ சிறுவயதிலிருந்தே மிகுந்த கூச்ச சுபாவம் நிறைந்தவராக இருந்திருக்கிறார். வீட்டிலேயே வளர்ந்திருக்கிறார். அவருக்கு பெரும் பொழுதுபோக்காக இருந்தது ஜப்பானிய கார்ட்டூன் படங்கள்தாம். மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பை தவிர்க்கத் தொடங்கி, பிறகு மனிதத் தொடர்புகளே இல்லாத அளவுக்கு கார்ட்டூன் பைத்தியம் அவரைப் பிடித்திருக்கிறது. பதின்பருவம் வந்த பிறகெல்லாம் அவரை பெண்கள் பொருட்படுத்தியது கூட இல்லை. பெண்களிடம் அதிகக் கிண்டலுக்குள்ளாகியிருக்கிறார் கோண்டோ. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அங்கிருந்த ஒரு பெண்ணால் கோண்டோவுக்கு பல தொல்லைகள் நேர்ந்திருக்கிறது. அப்போதே கோண்டோ ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்கிற முடிவு!

ஜப்பான் சமூகத்தில் திருமணம் செய்யாமல் வாழ்வதென்பது புதிய விஷயம் ஒன்றுமில்லை. அதற்கு ஒரு நீண்ட மரபு இருக்கிறது. 1980களின் காலகட்டத்தில் 50 ஆண்களில் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார். இன்றைய காலகட்டத்தில் அது வெகுவாக குறைந்து நான்கு ஆண்களில் ஒருவர் திருமணமாகாமல் இருக்கும் கட்டத்தை எட்டியிருக்கிறது. கோண்டோ இதில் விதிவிலக்கு. சுவாரஸ்யமான விதிவிலக்கு!

திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்தவர் திடீரென முடிவை மாற்றிக் கொண்டார். பத்து வருடங்களாக மிக்குவை காதலித்ததாக சொல்கிறார். அதற்குப் பின்னரே அவளை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

கோண்டோவை பொறுத்தவரை முப்பரிமான பெண் ஏமாற்ற மாட்டாள். முதுமை எய்த மாட்டாள். இறந்து போகவும் மாட்டாள். உண்மையான பெண்களிடம் இவை கிடைக்கவில்லை என்கிறார் ஹோண்டோ.

காதலில் கற்பனை இருக்கலாம். காதலரே கற்பனையாக இருந்தால் என்ன ஆவது? ஆனால் உலகம் அத்தகைய சூழலை நோக்கிதான் விரைந்து கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories