வைரல்

“நம்மைப் பற்றி எதிர்கால மக்கள் கொண்டிருந்த கருத்து என்ன தெரியுமா?” : ‘காலப்பயணி’ டிட்டர் சொன்னது என்ன?

மீண்டும் 2000மாம் ஆண்டில் தோன்றி ஒரு வருடம் வரை இணையதளங்களில் உலவி மீண்டும் காணாமல் போன டிட்டர், மனிதகுலத்தின் காலப்பயணத்தை பற்றிய சிந்தனையை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

“நம்மைப் பற்றி எதிர்கால மக்கள் கொண்டிருந்த கருத்து என்ன தெரியுமா?” : ‘காலப்பயணி’ டிட்டர் சொன்னது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

2000 ஆண்டின் ஒரு நாள். பல விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும் இணையத்தில் ஒரு விவாதப் பக்கம். பலர் அடிக்கும் வார்த்தைகள் திரையை நிறைத்துக் கொண்டிருந்தன. அவற்றில் சில வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவை என்ன வார்த்தைகள் தெரியுமா?

“வணக்கம். நான் ஒரு காலப்பயணி. 2036ஆம் ஆண்டிலிருந்து வருகிறேன். 1975ஆம் ஆண்டுக்கு சென்று ஐபிஎம் கணினியை பெற்றுக் கொண்டு திரும்ப என் காலத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்” என தொடங்கிய பதிவு அது. ஜான் டிட்டர் என்ற பெயர் கொண்டவன் பதிவிட்டிருந்தான். தொடர்ந்து தன்னிடம் ஒரு கால இயந்திரம் இருப்பதாகச் சொல்லி அதன் உள்ளடக்கங்களை குறிப்பிட்டு, அதைக் கொண்டு என்ன செய்யப்படும் என்பதையும் சொல்லிவிட்டு இறுதியில் அந்த இயந்திரத்தின் புகைப்படங்களை பதிவிடுவதாக கூறி முடிந்தது அப்பதிவு.

அவ்வளவுதான். எப்போதும் ஆர்வத்துடன் புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் முனைப்புடனும் இருக்கும் இணைய வாசகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்திராத அற்புதமான தகவல் வந்திருந்தது. எதிர்காலத்தில் இருந்து ஒரு மனிதன் வந்திருந்தான். அவனிடம் எதிர்காலத்தை பற்றிச் சொல்ல பல விஷயங்கள் இருக்குமென புரிந்து கொண்டார்கள்.

பல கேள்விகள் பறந்தன.

டிட்டர் அவை அனைத்துக்கும் பதிலளித்தான். கால இயந்திரத்தைப் பற்றி முழுமையாக விளக்கி விவரித்து அதற்கான விளக்கப் புத்தகப் படங்களைக் கூட பதிவேற்றினான். இணையத்தில் அவனை பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மதத்தைப் பின்பற்றும் அளவுக்கு மக்கள் அவனை நம்பத் தொடங்கினார்கள்.

ஒருநாள் அவன் காணாமல் போனான். அவனிடமிருந்து பதிவுகள் எதுவும் வரவில்லை. எங்கு போனான், என்ன ஆனான் என எதுவும் தெரியவில்லை. ஆனாலும் காணாமல் போன பின் கேட்கப்படும் கேள்விகளுக்கு முன்னரே பதில்களை அவன் கொடுத்திருந்தான்.

டிட்டரின் இலக்கு 2000மாம் ஆண்டு கிடையாது. 1975ஆம் ஆண்டுக்குத்தான் அவன் செல்ல விரும்பியிருந்தான். அங்கு சென்று மீண்டும் அவனுடைய காலமான 2036ஆம் ஆண்டுக்கு திரும்பும் வழியில் 2000மாம் ஆண்டில் நின்றிருக்கிறான். பிறகு மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்திருக்கிறான்.

’2036ஆம் ஆண்டில் நான் மத்திய ஃப்ளோரிடாவில் என் குடும்பத்தோட வாழ்கிறேன். தற்போது நான் டம்பாவில் இருக்கும் ராணுவ தளத்தில் பணிபுரிகிறேன். அழிவிலருந்து தப்பிய மக்கள் எல்லாம் ஒண்ணா இருக்காங்க. ஒண்ணா வசிக்கிறாங்க. வாழ்க்கை குடும்பத்தையும் குழுவையும் மையமாகக் கொண்டு நடக்குது. என்னுடைய பெற்றோர பிரிஞ்சு ஒரு நூறு மைல்கள் தள்ளிக் கூட என்னால வாழ முடியாது.

பெரிய நிறுவனங்கள் கிடையாது. தேவைப்படாத உணவு வகைகளையும் பொழுதுபோக்கும் விஷயங்களையும் அதிகமா உற்பத்தி பண்ற பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. உணவும் கால்நடையும் வீடுகள்லயே வளர்க்கப்பட்டு உள்ளூர் மக்களுக்கு விற்கப்படும். மக்கள் அதிகமா படிக்கறதுலயும் ஒருத்தர் ஒருத்தர் முகம் பார்த்து பேசியும் நேரத்தை செலவழிக்கிறாங்க.’ இவை எல்லாமும் எதிர்காலத்தில் இருக்கும் வாழ்க்கையை பற்றி ஜான் டிட்டர் தன்னுடைய உரையாடல்களில் குறிப்பிட்ட விஷயங்கள். பலர் டிட்டரை நம்பவில்லை. அதைப் பற்றி டிட்டருக்கு கவலையும் இருக்கவில்லை.

‘என்னுடைய இலக்கு நம்பாமல் இருக்க வேண்டுமென்பதுதான். ஒரு முக்கியமான ரகசியத்தையும் நான் சொல்லணும். எதிர்காலத்துல இருக்கற யாருக்கும் உங்களை பிடிக்காது. இந்த காலகட்டத்தை அவங்க வேறு விதமா பார்க்கறாங்க. சோம்பேறிகளும் தன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கிறவங்களும் ஆட்டு மந்தை போல நடக்கறவங்களும் வாழ்ந்த காலமாதான் எதிர்காலத்துல இருக்கறவங்க இந்த காலகட்டத்த பார்க்கறாங்க. அதனால நீங்க என்னை பத்தி கவலைப்படறத விட்டுட்டு உங்க வாழ்க்கை முறைய பத்தி கவலைப்படறது நல்லது.”

ஜான் டிட்டரின் வார்த்தைகள் சுலபமான வார்த்தைகளாக இருக்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை எதிர்கால மனிதன் பேசிய அனைத்தும் நம்மை பிரதிபலிக்கும் உண்மைகளாக இருந்தன. அவனுடைய வார்த்தைகளின் உண்மையே மேலும் மேலும் மக்கள் அவனை பின்தொடர வைத்தது.

முதன்முதலாக ஜான் டிட்டர் என்கிற காலப்பயணியின் பெயர் வெளிவந்தது 2000மாவது ஆண்டிலல்ல. ஆர்ட் பெல் என்பவரின் வழியாகத்தான் அப்பெயர் அறிமுகமானது. ஆர்ட் பெல் என்பவர் 1998ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி ஆர்ட் பெல்லுக்கு ஃபேக்ஸ் வழியாக ஒரு கடிதம் வந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் மீண்டும் ஒரு கடிதம் ஃபேக்ஸ்ஸில் அவருக்கு வந்தது. அக்கடிதத்தின் உள்ளடக்கம் இதுதான்.

‘ஜூலை 29ஆம் தேதி உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். ஏற்கனவே சொன்னது போல், நான் ஒரு காலப்பயணி. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வுலகில் நான் இருக்கிறேன். சீக்கிரமே கிளம்பி விடுவேன். எப்போதும் காலப்பயணிகள் அவர்கள் செல்லும் உலகின் காலப்போக்கை பாதிக்கும் வேலை எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் என்னுடைய வேலை இங்கு நிறைய காலத்தை எடுத்துக் கொண்டு விட்டது. இங்கு சந்தித்த பலர் எனக்கு பிடித்துவிட்டது.’- என்பதாகச் சென்றது அக்கடிதம்.

கடிதத்தை தன் நிகழ்ச்சியிலேயே படித்தும் காட்டினார் ஆர்ட் பெல். 1998ஆம் ஆண்டுக்கு பிறகு ஜான் டிட்டரை பற்றி எந்த தகவலும் இல்லை. மீண்டும் அப்பெயர் தோன்றியது 2000மாவது ஆண்டில்தான். ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்றும் அமெரிக்க நாடு பல துண்டுகளாக சிதறும் என்றும் பெரும் கொள்ளை நோய் ஏற்படும் என்றும் ரஷியாவின் அணு ஆயுத தாக்குதலில் அமெரிக்க நகரங்களும் சீனாவும் ஐரோப்பாவும் அழிக்கப்படும் பல செய்திகளை சொல்லியிருந்தான்.

உலகம் காலப்பயணத்தைப் பற்றி பல காலங்களில் பேசியிருக்கிறது. காலப்பயணத்துக்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அறிவியல் பல விளக்கங்களை கூறியிருக்கிறது. காலப்பயணத்தை பற்றி உலகெங்கும் பல திரைப்படங்களும் கதைகளும் நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. அறிவியல்பூர்வமாக சற்றே கடினமாக இருந்தாலும் காலப்பயணத்தின் விளக்கம் நோக்கமும் என்னவென்பதை பல்லாண்டுகளாக மனித குலம் விவாதித்து வந்திருக்கிறது. 1998ஆம் ஆண்டு தோன்றி, பிறகு தகவலில்லாமல் போய், மீண்டும் 2000மாம் ஆண்டில் தோன்றி ஒரு வருடம் வரை இணையதளங்களில் உலவி மீண்டும் காணாமல் போன டிட்டர் மனிதகுலத்தின் காலப்பயணத்தை பற்றிய சிந்தனையை மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

டிட்டர் பற்றிய கதை தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. செய்திகள் வாசிக்கப்படுகின்றன. 2003ஆம் ஆண்டில் ஜான் டிட்டரை பற்றி நூல் எழுதப்பட்டு வெளியாகுமளவு அவனது தாக்கம் எங்கும் இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களாக டிட்டர் சொன்ன தகவல் எதுவும் இன்று வரை நடக்கவில்லை. ஆனால் இன்றைய மக்களைப் பற்றி எதிர்கால மக்கள் கொண்டிருந்த கருத்து என அவன் சொன்னது உண்மையாகும் சூழலில்தான் நாம் இருக்கிறோம்!

banner

Related Stories

Related Stories