உலகம்

“அழிவு நெருங்கிக் கொண்டே இருக்கிறது..” : உலக நாட்டு தலைவர்களை சாடும் கிரெட்டா துன்பர்க் சொல்வது என்ன?

வளர்ந்த, அறிவுள்ளவர்களாக சொல்லப்படும் மனிதர்கள் எவருக்கும் வானிலை சிக்கல் பற்றிய கவலை இல்லாமலிருப்பது க்ரெட்டாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

“அழிவு நெருங்கிக் கொண்டே இருக்கிறது..” : உலக நாட்டு தலைவர்களை சாடும் கிரெட்டா துன்பர்க் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாள். பள்ளிக்கு கிளம்பிய க்ரெட்டா துன்பர்க் பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளி செல்ல அவருக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது. நேரே ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு சென்றார். வாசலருகே அமர்ந்து கொண்டார். கையில் ஒரு பதாகை இருந்தது. ‘காலநிலைக்காக பள்ளிக்கூட தர்ணா’ என ஸ்வீடன் மொழியில் எழுதியிருந்தது.

காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலக நாடுகள் காட்டிய அலட்சியம் க்ரெட்டாவை படிப்பை நிறுத்திவிட்டு போராட வைத்தது. “நான் அதிகம் யோசிப்பேன். பிரச்சினைகளை கண்டுக்காம இருக்க எல்லாராலையும் முடியுது. என்னால முடியல.. அதுவும் என்ன கவலைப்பட வைக்கிற பிரச்சினைய பத்தி யோசிக்காம இருக்க முடியல. ஸ்கூல்ல இருக்கும்போது டீச்சர்லாம் கடல்ல இருக்கற ப்ளாஸ்டிக் பத்தியும், உணவுக்கு கஷ்டப்படற பனிக்கரடிகளை பத்தியும் படங்கள் போட்டு காண்பிச்சாங்க. எல்லா படத்தையும் பார்க்கும்போது அழுகையா வந்தது.

என் கூட படம் பார்த்தவங்க எல்லாம் கவலைப்பட்டாங்க. ஆனா, படம் முடிஞ்சதும் அவ்ளோதான். வேற விஷயங்களுக்கு கவனத்தை திருப்பிட்டாங்க. என்னால அப்படி இருக்க முடியல! படத்துல பார்த்த காட்சிகள் எல்லாம் அப்படியே மனசுல பதிஞ்சு போயிடுச்சு” காலநிலை மாற்றத்தை பற்றி எட்டு வயதில் க்ரெட்டாவுக்கு தெரிய வந்திருக்கிறது. வளர்ந்த, அறிவுள்ளவர்களாக சொல்லப்படும் மனிதர்கள் எவருக்கும் வானிலை சிக்கல் பற்றிய கவலை இல்லாமலிருப்பது க்ரெட்டாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

வளர்ந்தவர்களின் அலட்சியம் க்ரெட்டாவுக்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. வானிலை மாற்றத்தை பற்றி எவரிடம் பேசினாலும், எப்போதோ வரவிருக்கும் பிரச்சினை போன்றே எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்றொரு குருட்டு நம்பிக்கையில் பேசுகிறார்கள் என்கிறார் க்ரெட்டா.

“நீங்க வைக்கிற நம்பிக்கை எனக்கு தேவையில்ல.. நீங்க பயப்படணும். அதுதான் எனக்கு வேணும். தினமும் எதிர்காலத்தை பத்தி எனக்கு வர்ற பயம், உங்களுக்கும் வரணும்.” க்ரெட்டாவின் பயத்தில் உண்மை இல்லாமல் இல்லை. அவர் வாழ வேண்டிய பூமியை எந்தவித பொறுப்புமில்லாமல் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார் க்ரெட்டா. க்ரெட்டாவின் போராட்டத்தை எவரும் மதிக்கவில்லை. எல்லாரும் கடந்து சென்று கொண்டே இருந்தார்கள். நான்கு மாதங்களில் அவரின் குரல் உலகுக்கு கேட்டது. 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூட்டி உலக நாடுகள் கலந்து கொண்ட காலநிலை மாற்ற மாநாட்டில் க்ரெட்டா துன்பர்க் பேசினார்:

“எந்த தப்பெல்லாம் செஞ்சு உலகத்தை இப்படியொரு அழிவுக்கு கொண்டு வந்து விட்டீங்களோ அதே தப்புகளை தொடர்ந்து செய்றத பத்திதான் நீங்க பேசிக்கிட்டே இருக்கீங்க. இப்போதைக்கு செய்யக்கூடிய சரியான விஷயம், நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கற எல்லா விஷயத்தையும் ப்ரேக் போட்டு நிறுத்தறதுதான். காலநிலை பிரச்சினைய நேரடியா சொல்லக்கூட உங்களால முடியல. அந்த வேலையையும் எங்கள மாதிரியான குழந்தைங்க தலைலதான் போட்டிருக்கீங்க.

“மனித குலம் மொத்தமும் ஒரு சில பேரோட பணம் சம்பாதிக்கிற ஆசைக்காக அழிக்கப்படுது. பணக்காரங்க சொகுசா வாழ்றதுக்காக நமக்கான வாழ்க்கை சூழல் நாசமாக்கப்படுது. பல பேர் படற கஷ்டத்த வச்சிதான் சில பேர் சொகுசா வாழறாங்க.

“நீங்கல்லாம் உங்க குழந்தைகளை ரொம்ப நேசிக்கிறதா சொல்லிக்கிறீங்க. ஆனா அவங்க எதிர்காலத்தை அவங்க கண்ணு முன்னாடியே அழிக்கிறீங்க. ஒரு பிரச்சினைய பிரச்சினைன்னு தெரிஞ்சிக்காம நாம அதை சரி பண்ண முடியாது. புதைபடிம எரிபொருளை எல்லாம் பூமிக்கடியிலேயே இருக்க விட்டுட்டு, நியாயத்தின் பக்கம் கவனத்தை திருப்பணும். இப்போ இருக்கற அரசியலமைப்ப வச்சுக்கிட்டு தீர்வு கண்டடைய முடியல. அதனால் இந்த அமைப்பையே மாத்த வேண்டியிருக்கு.

“இங்க இருக்கற உலகத் தலைவர்கள் கிட்ட, ’எங்கள காப்பாத்துங்க’ன்னு சொல்லி கெஞ்சறதுக்காக நாங்க இங்க வரலை. நீங்க எங்களை இதுக்கு முன்னாடியும் மதிக்கல. இனியும் மதிக்க மாட்டீங்க. நீங்க மன்னிப்பு கேட்கற காரணங்களை கடந்துட்டீங்க. நமக்கான காலத்தையும் நாம கடந்துட்டோம்.

“உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ மாற்றம் வந்துக்கிட்டிருக்கு. அதை சொல்லத்தான் இங்க வந்திருக்கோம். ஏன்னா, உண்மையான அதிகாரம் மக்கள்கிட்டதான் இருக்கு. அவங்க எல்லாத்தையும் மாத்துவாங்க!”

ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோ நகரில் காலநிலை மாற்ற மாநாடு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தை சரி செய்ய முடியாது என்கிற கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில் நடந்து கொண்டிருக்கும் மாநாடு இது.

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி ‘கட்டற்ற நுகர்வாக இல்லாமல், அர்த்தப்பூர்வமான ஆய்வுக்குட்பட்ட நுகர்வால்தான் வேளாண்மையைக் காப்பாற்ற முடியும்’ எனப் பேசியிருக்கிறார். கோவிட் காலத்தில் கூட அவசர அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி வேளாண்மையை, தனியாருக்கு தாரை வார்த்து அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை இயற்றிய மோடி இப்படி பேசுவதைத்தான் க்ரெட்டா, ”பணக்காரங்க சொகுசா வாழ்றதுக்காக நமக்கான வாழ்க்கை சூழல் நாசமாக்கப்படுது” என்றார்.

இங்கிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு வேளாண்மை அழிகிறது என மோடி வடிக்கும் முதலைக் கண்ணீரைத்தான் ”எந்த தப்பெல்லாம் செஞ்சு உலகத்தை இப்படியொரு அழிவுக்கு கொண்டு வந்து விட்டீங்களோ அதே தப்புகளை தொடர்ந்து செய்றத பத்திதான் நீங்க பேசிக்கிட்டே இருக்கீங்க” என்கிறார் க்ரெட்டா. காலத்தின் முள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அழிவு நெருங்கிக் கொண்டே இருக்கிறது. தீர்வுக்கு நகரா வாய்ச்சவடால் பேச்சு மட்டும்தான் எங்கும் நிரம்பியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories