உலகம்

3D பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜப்பான் இளைஞர்.. என்ன காரணம் தெரியுமா?

ஜப்பான் நாட்டில் அகிஹிகோ கோண்டோ என்ற 34 வயதாகும் இளைஞர் ஒருவர் முப்பரிமாண பொம்மையை காதலித்து திருமணம் செய்துக்கொண்டதற்கான காரணம் என்ன? - சிறப்பு செய்தி தொகுப்பு!

3D பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜப்பான் இளைஞர்.. என்ன காரணம் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஜப்பான் நாட்டில் ஒரு சம்பவம். அகிஹிகோ கோண்டோ என்ற ஒருவருக்கு 2018ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தில் தாய் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மணம் முடித்த பெண்ணின் மீது தாய்க்கு விருப்பம் இல்லை. ஏனெனில் அகிஹிகோ கோண்டோ திருமணம் செய்துகொண்டது ஒரு முப்பரிமாண பிம்பத்தை.

கோண்டோ திருமணம் செய்து கொண்ட முப்பரிமாண பிம்பத்தின் பெயர் மிக்கு. 16 வயது காட்சி பிம்பமான மிக்குவை திருமணம் செய்வதற்கென கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார். அந்த திருமணத்துக்கும் ஒரு 40 பேர் வந்து பார்த்து வாழ்த்தியிருக்கின்றனர்.

“அவளை நான் ஒருபோதும் ஏமாற்ற முயன்றதே கிடையாது. எப்போதும் மிக்கு மீதான காதலிதான் இருக்கிறேன்” என கோண்டோ பெருமைப்படுகிறார். திருமணத்துக்கு முன்னமே கூட கிட்டத்தட்ட 7 மாதங்களாக அவர் மிக்குவுடன்தான் வாழ்ந்தார். பிறருக்குதான் கோண்டோவின் திருமணம் அபத்தமாக இருந்ததே தவிர, அவருக்கு அப்படி தெரியவில்லை. அவர் ஓர் இயல்பான திருமண வாழ்க்கை வாழ்வதாகத்தான் நினைத்தார்.

3D பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜப்பான் இளைஞர்.. என்ன காரணம் தெரியுமா?

உறவுகளிடம் மனிதர்களுடன் அணுகுமுறை காலந்தோறும் மாறி வந்திருக்கிறது. காதல், நட்பு, குடும்பம் என எல்லா வகை மனித உறவுகளும் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த தொடர்ச்சியில் இன்று நாம் அடைந்திருக்கும் மாற்றம்தான் பொருட்களுடனான உறவும்.

உலகின் பணக்கார நாடுகளில் வசிக்கும் ஒரு சராசரி நபர் கிட்டத்தட்ட 20,000 ரூபாய்க்கான பொருட்களை ஒரு நாளில் நுகர்கிறார். ஒவ்வொரு நாளும் அவருடைய நுகர்வு 20,000 ரூபாய் அளவுக்கு இருக்கிறதெனில் ஒரு மாதத்தில் மட்டும் அவர் எத்தனை ரூபாய்களுக்கான பொருட்களை நுகர்ந்திருப்பார் என யோசித்துப் பாருங்கள்.

பொருட்கள் சார்ந்தே மொத்த வாழ்க்கையும் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனின் மனதில் உணர்வுகளை எப்படி பிரதிபலிப்பான்?

1776ஆம் ஆண்டு ஆடம் ஸ்மித் என்கிற பொருளாதார அறிஞர் இப்படி சொன்னார் : ‘ஒரு பொருள் உற்பத்தி ஆவதற்கான பலன் நுகர்வினால்தான் தீர்க்கப்படுகிறது’. ஆகவே நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை நாம் நுகர வேண்டும். நுகரவில்லை எனில் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஆதலால் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பொருளையும் பற்பல காரணங்களும் கற்பனைக்கதைகளும் சொல்லி நம் தலைகளில் கட்டுகின்றன.

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் ஒரு பொருளை நீங்கள் நுகர அந்த நிறுவனம் ஓர் உணர்வை கொண்டு பொருளை அடையாளப்படுத்தும். சாக்லெட் என்றால் ருசி, கார் என்றால் கம்பீரம், முகப்பூச்சு பொருட்கள் எனில் அழகு, வைர மோதிரம் என்றால் காதல், நகைகள் என்றால் பெண்மை என சொல்லிக் கொண்டே போகலாம். ஏதோவொரு மனித உணர்வை கட்டமைத்து உங்களுக்குள் அதை செலுத்தி அதற்கான சிந்தனையை வளர்த்தெடுத்து பிறகு அந்த உணர்வு சம்பந்தப்பட்ட பொருளை நீங்கள் வாங்க வேண்டியது கட்டாயம் என்கிற நிலைக்கு உங்களை நிறுவனங்கள் கொண்டு வந்து விடுகின்றன.

3D பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜப்பான் இளைஞர்.. என்ன காரணம் தெரியுமா?

19ஆம் நூற்றாண்டில் அறிஞர் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் இத்தகைய மனநிலையை பற்றி முக்கியமான ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார்: ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பொருளாதார மனமென ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரின் உடல், குடும்பம், நற்பெயர், உடைமைகள் ஆகியவற்றின் மொத்தம்தான் ஒரு மனிதனின் பொருளாதார மனமாகிறது’ என்கிறார். பட்டியலின் கடைசியில் வரும் உடைமைகள் என்கிற விஷயம்தான் நாம் பேசிக் கொண்டிருக்கும் பொருட்கள்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் உணர்வை கற்பித்து நிறுவனங்கள் விற்பதன் மறுமுனையில் நடப்பது என்ன தெரியுமா?

ஒவ்வொரு பொருளுக்கான உணர்வைப் பார்த்து வாங்கும் மக்கள் நாளடைவில் அந்த உணர்வுகளுக்கான இணைப்பை மனிதர்களிடம் தேடாமல் பொருட்களிடமே தேடத் தொடங்குகின்றனர். காரை கம்பீரமாக பார்ப்பவனுக்கு காரை தவிர எது கிடைத்தாலும் மனம் கம்பீரம் கொள்ளாது. வலிமையை ஆண்மையாக பார்ப்போருக்கு அப்படித்தான் ஒரு மேம்பாலம் மீது காதல் அரும்புகிறது. உணர்வுகளை பொருட்களை கொண்டு அடையாளம் காணத் தொடங்கிய பிறகு மனம் கொள்ளும் உணர்வுகளுக்கும் பொருட்களே தீர்வாக தோன்றிவிடுகிறது.

நம் அனைவருக்குமே பொருட்கள் மீது ஈர்ப்பு இருக்கிறது. வீடுகளை பொருட்கள் நிரப்பும் காலம் போய், மனங்களை பொருட்கள் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. உடல், எண்ணம், உணர்வு எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டு இன்றைய மனிதன் உயிரற்ற வெற்று பொருளாகிக் கொண்டிருக்கிறான்.

banner

Related Stories

Related Stories