உணர்வோசை

நாய்களை மனிதன் பழக்கப்படுத்தியது எப்படி? - உறவை பலப்படுத்திய முக்கியமான கூறுகள் என்னென்ன?

மனிதன் வேட்டையாடினால் தனக்கு உணவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை நாய்க்கு முதலில் விதைத்தான். அந்த நம்பிக்கை நாயை நட்பாக்கியது.

நாய்களை மனிதன் பழக்கப்படுத்தியது எப்படி? - உறவை பலப்படுத்திய முக்கியமான கூறுகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

நாய்களைப் பொறுத்தவரை ஓநாய்களிடமிருந்து அவை பரிணமித்தன என்பதுதான் பொதுவான நம்பிக்கை. அறிவியல்பூர்வமான உண்மை ஒன்று இருக்கிறது.

நாய்க்கும் ஓநாய்க்கும் பொதுவான ஒரு மூதாதை 34,000 வருடங்களுக்கு முன்பிருந்து 9,000 வருடங்களுக்கு வாழ்ந்திருக்கிறது. அதாவது ஓநாய்க்கும் முந்தைய விலங்கிலிருந்து இரண்டு பிரிவுகள் பரிணமித்திருக்கின்றன. ஒன்று நாயாகவும் மற்றொன்று ஓநாயாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன.

நாய்களுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுக்கு பல கூறுகள் துணைபுரிந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை மூன்று.

1. உணர்வுநிலை:

மனித சமூகத்துடன் உணர்வுப் பூர்வமாக பழகும் விலங்காக நாய் இருக்கிறது. நாயால் மனிதனின் பேச்சை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். குறிப்பாக, பாராட்டும் தொனியிலான பேச்சுகளை சுலபமாக நாய்கள் புரிந்து கொள்ளுமாம்.

மொழியை வைத்தும் உச்சரிப்பின் ஏற்ற இறக்கங்களை வைத்தும் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை மனிதருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது என மனித சமூகம் நம்பிக் கொண்டிருந்த சூழலில், நாயை அனுப்பி இயற்கை நம்முடைய திறனை சமன்படுத்தியிருக்கிறது.

2. பார்வை:

நாயின் பார்வையும் மனிதர்களைப் போல்தான். நாம் நேசிக்கும் நபர்களை நேருக்கு நேராக கண்களைப் பார்த்து பேசுவதை போலவே நாய்களும் நாம் பேசுகையில் நம் கண்களைப் பார்க்கின்றன. நேரடியாக அவற்றின் உணர்வுகளை நமக்கு கடத்துகின்றன. இத்தகைய நாயின் தன்மைக்கு அறிவியலுலகம் ஒரு விடையைத் தருகிறது. மனிதன் நாயை வளர்க்கத் தொடங்கிய காலத்தில் அவனை சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால், உணர்வுகளையும் அவனைப் போலவே கடத்த அவை பழக்கப்பட்டிருக்கும்.

3. விளையாட்டு:

நாய்களுடன் மனிதர்கள் பல விளையாட்டுகளை விளையாடுவதுண்டு. எவருமே விளையாடும் பொதுவான விளையாட்டு ஒன்று இருக்கிறது. ஒரு பொருளை தூரப் போட்டு அதை நாய் எடுத்து வரச் செய்யும் விளையாட்டு! இந்த விளையாட்டு, நாயை தம் கட்டளைக்கு பணிய வைப்பதற்கு மனிதகுலம் பயன்படுத்திய ஆரம்பகால பயிற்சியாக இருக்கலாம். அந்த பயிற்சியின் நினைவே மரபு ரீதியாக நமக்குள் தங்கி நீண்டு காரணமே இன்றி இன்றும் ஒரு நாயை கண்டதும் ஒரு பொருளை தூக்கி போட்டு எடுத்து வர கட்டளை இட வைப்பதாகவும் இருக்கலாம்.

நாய்களை மனிதன் பழக்கப்படுத்தியது எப்படி? - உறவை பலப்படுத்திய முக்கியமான கூறுகள் என்னென்ன?

மேற்குறிப்பிட்ட மூன்று கூறுகளுமே நாயை நம் வாழ்க்கைகளுக்குள் ஒரு முக்கியமான தோழனாக உருவாக்கியிருக்கிறது என்றாலும் நாயுடனான மனிதனின் உறவு அவனது அதிகாரத்துவ மனம் தொடங்கியதன் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. முதன்முதலாக மனிதன் இன்னொரு விலங்கை அடிமைப்படுத்தி தனக்கான வேலைகளை செய்ய வைக்கத் தொடங்கிய காலம் பிறந்தது அப்போதுதான்.

வேட்டை கால மனிதனுக்கு நாய் போட்டியாக இருந்தது. ஒரே இடத்தில் வசிக்கும் வேட்டை மனிதனுக்கும் நாயின் இனத்துக்கும் உணவைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை. இரண்டு உயிர்களுக்குமே இரை சிறு உயிர்கள்தான். போட்டிக்கு வந்து நிற்கும் நாயை நட்பாக்கிக் கொள்வதில் ஆதாயம் இருப்பதை உணர்ந்தான் மனிதன். நாய்க்கு இருக்கும் மோப்ப சக்தி, வேகம், வேட்டைத்தன்மை எல்லாம் மனிதனுக்கு உபரி சக்திகள். எப்படி நாயை நட்பாக்குவது என்பது மட்டும் புரியவில்லை.

மனிதன் வேட்டையாடிய உயிரை நாய்களுக்கும் மிச்சம் வைக்கத் தொடங்கினான். மனிதன் வேட்டையாடினால் தனக்கு உணவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை நாய்க்கு முதலில் விதைத்தான். அந்த நம்பிக்கை நாயை நட்பாக்கியது. மனிதச் சமூகத்துக்குள் புழங்கத் தொடங்கியது. இயற்கையை வசியப் படுத்த முயன்ற மனிதனின் முதல் வெற்றிகளில் முக்கியமான வெற்றி நாயை பழக்கப்படுத்தியதுதான்.

அங்கு தொடங்கி மனிதன் பிற விலங்குகளைப் பழக்கும் நம்பிக்கையை பெற்றான். அடிமைப்படுத்தி தன்னுடைய ஆதாயத்துக்கு சுரண்டும் தன்மையை வளர்த்துக் கொண்டான். பிறகு சக மனிதனையும் அடிமையாக்கி சுரண்டும் வாழ்க்கைமுறையை உருவாக்கி போதிக்கத் தொடங்கினான். நாயை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவித்ததைப் போல் பிற மனிதர்களை அதிகாரம் கொண்டும் மொத்த இயற்கையையும் லாபவெறி கொண்டும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறான்.

banner

Related Stories

Related Stories