உலகம்

“அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலில் வெடித்த #BlackLivesMatter போராட்டம்”: நிறவெறியால் 5 வயது சிறுவன் பலி!

பிரேசிலில் 5 வயது கருப்பின சிறுவன் நிறவெறியால் பலியான சம்பவம் அந்நாட்டு மக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.

“அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலில் வெடித்த #BlackLivesMatter போராட்டம்”: நிறவெறியால் 5 வயது சிறுவன் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரின் கழுத்துப் பகுதியில் மினியாபொலிஸ் காவல்துறை அதிகாரி முட்டியால் அழுத்தியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படுகொலைக்கு நீதி கோரியும், கறுப்பினத்தவருக்கு எதிரான துவேஷத்தை எதிர்த்தும், மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டத்திற்கும் கருப்பின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காகவும் #BlackLivesMatter என்ற போராட்டம் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்காத சூழலில், பிரேசிலில் 5 வயது கருப்பின சிறுவன் நிறவெறியால் பலியான சம்பவம் அந்நாட்டு மக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. பிரேசிலின் ரெசிஃப் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பின பெண் மிர்டெஸ் ரெனட்டா ஸூசா. இவருக்கு 5 வயதில் மிகுவெல் டா சில்வா என்ற மகன் உள்ளான்.

மிகுவெல் டா சில்வா
மிகுவெல் டா சில்வா

மிகுவெல் டா சில்வாவின் தாயார் அப்பகுதியில் வசதிபடைத்த வெள்ளையின பெண்ணிடம் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கால் பள்ளிகள் திறக்காததால் வீட்டில் தனியாக இருக்க மிகுவெல் டா சில்வாவிற்கு விருப்பம் இல்லாததால், தான் பணி செய்யும் வீட்டிற்கு அவரது தாயார் அழைத்துச் சென்றுள்ளார்.

வேலை செய்துக்கொண்டிருந்த சிறிது நேரத்தில், நாயை நடைபயணத்திற்கு அழைத்துச் செல்லும் படி உரிமையாளர் கூறியுள்ளார். அப்போது தனது மகன் இங்கேயே இருக்கட்டும், என வீட்டின் உரிமையாளர் பொறுப்பில் விட்டுவிட்டு மிர்டெஸ் ரெனட்டா ஸூசா சென்றுள்ளார்.

அவர் வெளியே சென்ற சிறிதுநேரத்தில் மகன் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக உரிமையாளரின் போன் வந்துள்ளது. இதனிடையே அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததான்.

“அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலில் வெடித்த #BlackLivesMatter போராட்டம்”: நிறவெறியால் 5 வயது சிறுவன் பலி!

மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தயார் கொடுத்தப்புகாரின் பெயரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுவன் வீட்டின் உரிமையாளருடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

அப்போது வீட்டின் உரிமையாளர் சர்வீஸ் எலிவேட்டரில் சிறுவன் இருப்பது தெரிந்து அதில் இருந்த பட்டனை அழுத்தியுள்ளார். எலிவேட்டர் தரைதளத்திற்குச் செல்வதற்குப் பதிலாக வீட்டின் மேல்தளத்திற்குச் சென்றுள்ளதாக தெரிகிறது. அதில் இருந்து வெளியேறிய சிறுவன் பால்கனியை தாண்டும் போது தவறி கீழே விழுந்தாக கூறப்படுகிறது.

வீட்டின் உரிமையாளரின் அலட்சியமும், நிறவெறி பாகுபாடுமே இந்த கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தைத் தொடர்ந்து #BlackLivesMatter போராட்டத்தை பிரேசில் மக்கள் கையில் எடுத்துள்ளனர். போராட்டத்தில் சிறுவன் மிகுவெல் டா சில்வாவின் புகைப்படமும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் புகைப்படமும் அடங்கிய பதாகங்களை கையில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

“அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலில் வெடித்த #BlackLivesMatter போராட்டம்”: நிறவெறியால் 5 வயது சிறுவன் பலி!

அமெரிக்காவைப் போலவே பிரேசிலும் இனப் பிரச்சனை, நிறவெறி தொடர்கிறது. பிரேசில் மக்கள் தொகையில் 56 சதவீத மக்கள் ஆப்பரிக்காவின் பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்நாட்டில் வெள்ளையின மக்கள் சிலரால் பல பிரச்சனைகளை கருப்பின மக்கள் எதிர்க்கொள்வதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் பிரேசில் உள்ள நிலையில் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கு ஆதரவாகவும், பிரேசிலில் மிகுவெல் டா சில்வாவிற்கு ஆதரவாகவும் ஒரே முழக்கத்தோடு போராட்டம் வெடித்துள்ளது இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories