உலகம்

“ஆக்கப்பூர்வமாக செயல்படாவிடில் வாயை மூடிக்கொண்டு இருங்கள்” - அதிபர் ட்ரம்புக்கு ஹூஸ்டன் போலிஸ் பதிலடி!

போராட்டத்தை கட்டுப்படுத்த ஆதிக்கத்தை செயல்படுத்துங்கள் என ட்ரம்ப் கூறியதற்கு ஹூஸ்டன் காவல்துறை தலைவர் அசெவெடோ பதிலடி கொடுத்திருக்கிறார்.

“ஆக்கப்பூர்வமாக செயல்படாவிடில் வாயை மூடிக்கொண்டு இருங்கள்” - அதிபர் ட்ரம்புக்கு ஹூஸ்டன் போலிஸ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அமெரிக்காவின் மின்னேபொலிஸ் என்ற பகுதியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை, டெரின் சாவின் என்ற போலிஸ் அதிகாரி ஒருவர், தனது காலால் மிதித்து கொன்ற சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்ரம்ப் அரசுக்கு இந்த விவகாரம் மேலும் அதிர வைத்திருக்கிறது. நிறவெறி காரணமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கர்கள் பல்வேறு மாகாணங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6 நாட்களாக தொடர்ந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலிஸார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி வருகின்றனர். இதனால் போராட்டம் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே போலிஸாரும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்து களத்தில் இறங்கியுள்ளனர்.

இப்படி இருக்கையில், வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த மாகாண ஆளுநர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், கட்டுப்படுத்த தவறி நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும் கூறியிருந்தார்.

மேலும், போராட்டங்களும், வன்முறையும் நாட்டுக்கு அவமானம். ஆகவே ஊரடங்கை கட்டுப்பாட்டுடன் செயல்படுத்த ராணுவத்தை இறக்க வேண்டியிருக்கும் எனவும் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, ட்ரம்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹூஸ்டன் காவல்துறையின் தலைவர் ஆர்ட் அசெவெடோ சி.என்.என். ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க முடியாவிட்டால் தயவுசெய்து வாயை மூடிக்கொண்டு இருங்கள். இதனை நான் நாட்டின் அனைத்து காவல்துறை தலைவர்கள் சார்பாக கூறிக்கொள்கிறேன் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரமில்லை. மக்களின் இதயங்களை வெல்ல வேண்டிய நேரம். ஆகவே, இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடாதீர்கள் என ட்ரம்புக்கு வலியுறுத்தியுள்ளார் ஹூஸ்டர் காவல்துறை தலைவர் அசெவெடோ. இது தொடர்பான வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories