உலகம்

கனடாவில் அமைச்சரான தமிழ்ப் பெண் - யார் இவர்?

கனடா அமைச்சராகப் பதவியேற்றார் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்.

கனடாவில் அமைச்சரான தமிழ்ப் பெண் - யார் இவர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கனடா நாட்டில் கடந்த மாதம் 21ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கிறது.

இதனையடுத்து, அந்நாட்டின் புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இதில், இந்தியர்கள் நால்வர் உட்பட 37 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அதில், அனிதா ஆனந்த் என்பவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட முதல் கனடா அமைச்சராவார்.

அனிதா ஆனந்த், கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கெண்ட்வில் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். தந்தை சுந்தரம் விவேகானந்தன் தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்தவர். தாய் சரோஜ் ராம் பஞ்சாப்பின் அமிர்தசரஸை சேர்ந்தவர்.

கனடாவில் அமைச்சரான தமிழ்ப் பெண் - யார் இவர்?

முதுநிலை சட்டப்படிப்பு படித்துள்ள அனிதா ஆனந்த் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக பணியாற்றியவர்.

மேலும், மூலதன சந்தைகளில் ஆராய்ச்சி இயக்குநராகவும் தான் படித்த குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஜான் என்பவருடன் திருமணமாகி நான்கு குழந்தைகளை உடைய அனிதா ஆனந்த், ஓக்வில்லே தொகுதியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தின் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட முதல் பெண் எம்.பி இவர்தான்.

தற்போது கனடா நாட்டின் பொதுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் அனிதா ஆனந்த். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் கனடாவின் அமைச்சராக இருப்பது உலகில் உள்ள அனைத்தும் தமிழர்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், இவருடன் இணைந்து கனடா அமைச்சரவையில் இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories