உலகம்

“பெரியார் ஏன் எல்லைக்கோடுகள் இல்லாத உலக மனிதராகத் திகழ்கிறார்?” - ப.திருமாவேலன் உரை!

பெரியார் ஏன் எல்லைக்கோடுகள் இல்லாத உலக மனிதராக திகழ்கிறார்? என்று அமெரிக்காவில் நடந்த மாநாட்டில் பெரியாரிய சிந்தனையாளரும், ஊடகவியலாளருமான ப.திருமாவேலன் பேசினார்.

“பெரியார் ஏன் எல்லைக்கோடுகள் இல்லாத உலக மனிதராகத் திகழ்கிறார்?” - ப.திருமாவேலன் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

மனிதநேயம் - சுயமரியாதை குறித்த பன்னாட்டு மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் பெரியாரிய சிந்தனையாளரும், கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுத் தலைவருமான ப.திருமாவேலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அமெரிக்காவில் இயங்கி வரும் பெரியாரிய பன்னாட்டு அமைப்பும், அமெரிக்க மனிதநேய சங்கமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் ப.திருமாவேலன் பேசியதாவது:-

“பெரியாரின் மனிதநேயம் என்ற தலைப்பில் பேச நான் அழைக்கப்பட்டு இருக்கிறேன். இந்த மாபெரும் அவையில் பேசும் ஆங்கிலப் புலமை பெற்றவனல்ல நான். எனவே மொழியில் இருக்கும் குறைகளை மன்னிக்கவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால் நிச்சயமாக கருத்தில் பிழைகள் இருக்காது என்ற உறுதிமொழியை உங்களுக்குத் தருகிறேன்!

நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ்நாட்டில் ஒரு விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. பெரியாரின் எதிரிகள், 'பெரியார் தமிழர் அல்ல' என்று விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நான் இந்தியாவில் இருந்து வருகிறேன். இங்கு ஒரு விவாதம் நடந்து வருகிறது. பெரியாரின் எதிரிகள், 'பெரியார் தேசத் துரோகி' என்று விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரைத் தமிழர் இல்லை என்று சொல்வதன் மூலமாக, பெரியாரை இந்தியத் துரோகி என்று சொல்வதன் மூலமாக அவர் பேசிய உண்மைகளை பொதுமக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி விட முடியுமா என்று அந்த சக்திகள் நினைக்கிறார்கள்.

பெரியார் தன்னை தமிழனாகவோ, இந்தியனாகவோ அடையாளப்படுத்திக் கொண்டவர் அல்ல. அவர் தன்னை எப்படி அறிமுகம் செய்து கொண்டார் என்றால், 'நான் ஒரு சுதந்திர மனிதன், சுதந்திர சிந்தனை கொண்டவன்' என்று தான் அடையாளப்படுத்திக் கொண்டார்.

“பெரியார் ஏன் எல்லைக்கோடுகள் இல்லாத உலக மனிதராகத் திகழ்கிறார்?” - ப.திருமாவேலன் உரை!

சுதந்திர மனிதனுக்கு மொழியில்லை. இனமில்லை. நாடு இல்லை. ஆமாம் பெரியாருக்கு மொழி, இனம்,நாடு என்ற எந்தச் சிறையும் இல்லை. உலகளாவிய மனிதனாகத் தான் அவர் வாழ்ந்தார்.

மனிதருக்குள் சாதி வேறுபாடு இல்லை, மத வேறுபாடு இல்லை, மொழி வேறுபாடு இல்லை, நாட்டு வேறுபாடு இல்லை, நான் வெள்ளை - நீ கறுப்பு என்ற வேறுபாடு இல்லை, நான் ஆண் - நீ பெண் என்ற வேறுபாடும் இல்லை. எந்த வேறுபாடும் அற்ற உலக மனிதனாக அவர் வலம் வந்தார்.

ஆண் - பெண் வேறுபாடாவது அவருக்கு இருந்திருக்கத் தானே வேண்டும்? ஆனால் பெண்கள் மாநாட்டில் பேசிய பெரியார், 'பெண்களாகிய நாம்' என்று பேசி இருக்கிறார் என்றால் அவருக்கு பால் பேதம் என்ற நினைப்பும் இருந்ததாகத் தெரியவில்லை. 'உங்களுக்காக பேசும் ஆணை நம்பாதே' என்று ஒரு ஆண் பேசி இருக்கமுடியாது அல்லவா?

மனைவி நாகம்மாள் இறக்கிறார். 'ஒரு தொல்லை ஒழிந்தது' என்கிறார். மணியம்மையை திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகும் அந்த மணியம்மை, புத்தகம் விற்பவராகத் தான் வலம் வருகிறார். இந்த மனிதனிடம் பாசம் என்ற ஒன்றே இல்லையோ என்ற அளவுக்கு நடந்து கொள்கிறார்.

என்ன தான் சுதந்திர மனிதனாக இருந்தாலும் அந்த மனிதனுக்கு மனித இயல்புகளான ஈகோ, புகழ், மான அவமானம் ஆகியவை இருக்கத் தானே செய்யும். ஆனால் புகழுக்காக எதையும் அவர் செய்யவில்லை. புகழ் எனக்குத் தேவையில்லை என்றவர் அவர்.

பொதுவாழ்க்கைக்கு வந்தவன் மான அவமானத்தைப் பற்றி கவலைப்படக் கூடாது என்றார். தயவு தாட்சண்யம் இல்லாத மனிதராக இருந்தார். எல்லாவற்றையும் நிர்வாணமாகப் பார்த்தார். இப்படி சுதந்திரமான மனிதன் யாராவது உண்டா என்று சொல்லுங்கள்?

தன் புகழ், தன் பெருமை, தன் முனைப்பு, தான் மட்டுமே என்ற தன்மைகள் இல்லாத மனிதனாக இருந்தார் பெரியார். உலகம் இதுவரை பார்த்த எல்லாத் தத்துவஞானிகளும், 'நான் சொன்னதே சரி' என்பார்கள். அதுதான் அவர்களை ஞானிகள் வரிசையில் கொண்டுபோய் உட்கார வைத்தது.

பெரியார் ஒருவர் தான், 'நான் சொல்வது என்னைப் பொறுத்தவரையில் சரி' என்று சொன்ன தத்துவஞானி. 'நான் சொல்வதைப் பின்பற்று' என்று தான் எல்லாத் தத்துவஞானிகளும் சொன்னார்கள். 'நான் சொல்வதை அப்படியே பின்பற்றிவிடாதே' என்று சொன்ன ஒரே தத்துவஞானி பெரியார் மட்டுமே.

'எனது வழியில் வா' என்று தான் அனைத்து தத்துவஞானிகளும் அழைத்தார்கள். 'எனது வழியில் வராதே, நான் எப்போது, எப்படி மாறுவேன் என்று எனக்கே தெரியாது' என்று சொன்ன தத்துவஞானி பெரியார் மட்டுமே. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் மனித இயல்புகள் என்று சொல்லப்படுவதைத் தாண்டிய மனிதராக வாழ்ந்தார்.

“பெரியார் ஏன் எல்லைக்கோடுகள் இல்லாத உலக மனிதராகத் திகழ்கிறார்?” - ப.திருமாவேலன் உரை!

எல்லைக்கோடுகள் இல்லாத உலக மனிதராக வாழ்ந்தார். அவரை யாருடன் அல்லது எதனுடன் ஒப்பிடுவது? அவரை இயற்கையுடன் தான் ஒப்பிடவேண்டும். இயற்கையைப் போல எல்லாருக்குமானவராக இருந்தார். அதனால் தான் தமிழகம் தாண்டி, இந்தியா தாண்டி, உலகின் அனைத்து நாடுகளும் கொண்டாடப்படும் மனிதராக இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜெர்மனியில்... இந்த ஆண்டு அமெரிக்காவில்... அடுத்த ஆண்டு உலகின் ஏதாவது ஒரு பகுதியில் சூரியனைப் போல,நிலவைப் போல,காற்றைப் போல, மழையைப் போல நினைக்கப்படும் மனிதராக பெரியார் இருப்பார்.”

இவ்வாறு ப.திருமாவேலன் பேசினார்.

banner

Related Stories

Related Stories