அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
இவர்கள் இருவரும் 8 நாட்கள் அங்கு ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம், இவர்கள் இருவரும் இல்லாமல் காலியாக பூமிக்கு திரும்பியது.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் உட்பட 7 பேர் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் உள்ளனர். அவர்களை பூமிக்கு அழைத்துவருவதற்காக புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து டிராகன் விண்கலத்துடன் Falcon ராக்கெட் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய நேரப்படி நேற்று காலை டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்நிலையில், 9 மாத தவிப்புக்கு பிறகு விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று புறப்படுகிறார். சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உட்பட 4 பேருடன் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு பூமியை நோக்கி பயணத்தை தொடங்கும் டிராகன் விண்கலம், நாளை அதிகாலை 3.27 மணிக்கு ஃபுளோரிடா கடற்பகுதியில் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபுளோரிடா கடலில் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப நாசா திட்டமிட்டுள்ளது.