ஆண்டுதோறும் பிப் 14 காதலர் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினம் முன்பாக பிப் 9-ம் தேதி சாக்லேட் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காதலர்கள் தங்கள் பிரியர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பர். குறிப்பாக Dairy Milk சாக்லேட் வாங்கி கொடுத்து மகிழ்விப்பர். அந்த வகையில் இளைஞர் ஒருவர் வாங்கிய சாக்லேட்டில் உயிருடன் புழு இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது அமீர்பேட்டை என்ற பகுதி. இங்கு இருக்கும் ராபின் சாக்கஸ் (Robin Zaccheus) என்ற பெயர் கொண்ட நபர் ஒருவர், அமீர்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள ரத்னதீப் ரீடெய்ல் என்ற கடையில் Dairy Milk சாக்லேட் வாங்கியுள்ளார். வாங்கி சில மணி நேரம் கழித்து பிரித்து பார்க்கையில் அதில் உயிருடன் புழு ஒன்று நெழிந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இணையவாசி, உடனே இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமீர்பேட்டை மெட்ரோ நிலையத்தில் இருக்கும் ரத்னதீப் கடையில் இன்று வாங்கிய கேட்டபரி சாக்லேட்டில் ஒரு புழு ஊர்ந்து கொண்டிருந்தது. காலாவதியாகும் தயாரிப்புகளின் தர சோதனை உள்ளதா? பொது சுகாதாரக் கேடுகளுக்கு யார் பொறுப்பு?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது வைரலாகி வரும் நிலையில், Dairy Milk நிறுவன ஊழியர் ஒருவர் அந்த நபரின் வீட்டிற்கு நேரில் வந்து சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது இறந்த நிலையில் புழு இருந்ததை உறுதி செய்த அந்த நபர், இதுகுறித்து மேலிடத்தில் தெரிவித்து உரிய நடவ்டிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுபோன்ற சாக்லேட்களில் புழு உள்ளிட்டவை இருப்பது இது முதல்முறை அல்ல; முன்னதாக பலமுறை இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.