அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பசிபிக் கடற்கரை அருகே சான் டியாகோ (San Diego) என்ற இடம் உள்ளது. இங்கு அமைந்திருக்கும் சைக்கிள் கேரேஜ் ஒன்றில் விலையுயர்ந்த சைக்கிள்கள் இருந்தது. இந்த சூழலில் கடந்த ஜூலை 15-ம் தேதி இரவு சுமார் 10.40 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இந்த சைக்கிள் கேரேஜுக்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் அங்கே இருந்த சுமார் 1.7 லட்சம் மதிப்பிலான (1,300 டாலர்) சைக்கிளை எடுத்து செல்ல முயன்றார். அப்போது உள்ளே இருந்து நாய் ஒன்று இந்த திருடனை நோக்கி வந்துள்ளது. நாயை கண்டதும் அந்த திருடன் அங்கிருந்து செல்லாமல், வெளியே எடுத்த சைக்கிளை உள்ளே விட்டுவிட்டு அந்த நாயுடன் விளையாடியுள்ளார்.
அந்த நாயை அந்த மர்ம நபர் கொஞ்சி விளையாடுகிறார், அந்த நாயும் அவருடன் விளையாடுகிறது. அப்போது அந்த நாயை நோக்கி அந்த நபர் 'I LOVE YOU TOO' என்கிறார். அதுமட்டுமின்றி உனது அப்பா (நாயின் உரிமையாளர்) எங்கே என்று அதனிடம் கேட்கிறார். சிரித்துக்கொண்டே மீண்டும் விளையாடுகிறார். பின்னர் சிறிது நேரத்தில் தான் திருட முயன்ற அந்த சைக்கிளை எடுத்து அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து சைக்கிளின் உரிமையாளர் சான் டியாகோ போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த மர்ம நபர், நாயுடன் விளையாடி விட்டு பின்னர் சைக்கிளை திருடி செல்லும் தொடர்பான சிசிடிவி வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சான் டியாகோ காவல்துறை தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பதிவு ஒன்றையும் செய்துள்ளது. அந்த பதிவில், " ஜூலை 15, 2023 அன்று, சுமார் இரவு 10:40 மணியளவில், பசிபிக் கடற்கரைக்கு அருகில் உள்ள கேரேஜ் ஒன்றில் அடையாளம் தெரியாத வெள்ளையாக இருக்கும் ஆண் ஒருவர் நுழைந்தார். அவர் சுமார் $1,300 மதிப்புள்ள 2019 பிளாக் எலெக்ட்ரா 3-ஸ்பீடு மிதிவண்டியைப் அங்கிருந்து எடுத்து சென்றார். இது உங்கள் சராசரி பைக் அல்ல; இது தனித்துவமானது, டயர் வால்வுகளில் "8-பால்" தொப்பிகள், சட்டத்தில் "8-பந்து" லோகோ மற்றும் ஒரு சரிபார்க்கப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை வடிவத்துடன் குறிக்கப்பட்ட பின்புற சக்கர சட்டகம்.
ஒரு வித்தியாசமான நிகழ்வுகளில், சந்தேக நபர் தப்பிக்க முற்பட்டபோது, கேரேஜுக்குள் நுழைந்த வீட்டு நாயை செல்லமாக கொஞ்சினார். சந்தேக நபர் ஒரு வெள்ளை ஆண் என விவரிக்கப்பட்டுள்ளது, கடைசியாக நீலம் மற்றும் வெள்ளை தொப்பி, சாம்பல் சட்டை, நீல ஷார்ட்ஸ் மற்றும் ஆரஞ்சு தடகள காலணிகள் அணிந்திருந்தார். அவர் கருப்பு மற்றும் நீல முதுகுப்பையை எடுத்துச் சென்றார்.
இந்த நபரை அல்லது திருடப்பட்ட பைக்கை உங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கு அடையாளம் காண உதவுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பலரது மாறுபட்ட கருத்துகளை பெற்று வருகிறது.