வைரல்

“ஆண்களின் அழுகை அவ்வளவு அவமானகர விஷயம் அல்ல..” - குடும்பங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

கோபப்படுபவனை பதிலுக்கு கத்தாமல் அணைத்து பாருங்கள். தேம்ப தொடங்கிவிடுவான். மிக எளிமையாய் உடையக்கூடியவன் ஆண் தான். பெண் அல்ல.

“ஆண்களின் அழுகை அவ்வளவு அவமானகர விஷயம் அல்ல..” - குடும்பங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஆண்களின் அழுகை!

ஆண்கள் அழலாம். அழவும் வேண்டும். ஆனால் நம் சமூகத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆண் அழுவது இயலாமையாக பார்க்கப்படும் புத்தி உண்டு. நல்ல விஷயங்களை இழிவாக்கவே ஒரு பாணி இருப்பதுபோல், அழுகையையே பரிதாபம் பெற பயன்படுத்தி பெண்களை வெல்லும் உத்திகளும் உண்டு.

வழக்கம் போல் ஒரு விஷயத்தின் இரு போக்கு. இரு போக்குமே குழப்பிக்கொண்டு தப்பர்த்தங்கள் கொள்ளும் வாய்ப்புகள் இங்கு அதிகம்.

ஆனால் ஆணுக்குதான் அழுதல் அதிகம் தேவை. குடும்பம், சுரண்டல் என வாழ்வில் அவன் இழப்பது அதிகம். அதை சொல்லி அழவும் தடை கொண்ட சமூகம். இந்த இரண்டுக்குள் உழன்று உழன்று ஒன்றி அவன் மவுனியாகி விடுகிறான். அல்லது கோபக்காரனாகி விடுகிறான்.

ஆண் அடக்கி வைக்கும் கண்ணீரே கோபமாக வெடிக்கிறது. அதனால்தான் கோபக்காரன் நம்மை பொறுத்தவரை கெட்டவனாக தெரிகிறான். மனோதத்துவ நிபணர்களுக்கு குழந்தையாக, நோயாளியாக தெரிகிறான்.

கோபப்படுபவனை பதிலுக்கு கத்தாமல் அணைத்து பாருங்கள். தேம்ப தொடங்கிவிடுவான். மிக எளிமையாய் உடையக்கூடியவன் ஆண் தான். பெண் அல்ல.

சரி, முதல் பத்தியில் சொல்லி இருக்கும் சிக்கலுக்கு என்னதான் தீர்வு?

அழும் ஆணை பார்த்து பெண்கள் காதலிக்க வேண்டாம். ஆனால் அவர்கள் காதலிக்கும் ஆண், அழுவதை பார்த்து நகையாடவும் வேண்டாம். வீட்டில் தாய், தந்தை, அக்கா, தங்கை என எல்லாரும் பேசுங்கள். அழுவதை ஒரு பழக்கமாக கூட ஆக்கிக் கொள்ளுங்கள். அது அவ்வளவு அவமானகர விஷயம் அல்ல என பழக்கப்படுத்துங்கள்.

இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் முன்பிருந்ததைவிட அதிகமாக அழுவதற்கான காரணங்கள், பாலினங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. ஆகவே ஆண் அழுதாலும் கட்டிப்புடியுங்கள். அரவணையுங்கள். அவனும் ஒரு காலத்தில் குழந்தைதான். அந்த குழந்தையை அவன் இறக்கும்வரை இழக்கவும் போவதில்லை.

ஒரு கைகோர்ப்பு, ஓர் அணைப்பு, ஒரு தோள் சாய்வு ஆகியவை பெண்ணை போலவே ஆணுக்கும் ஆறுதலை தரும். ஓர் இணைப்பு, ஒரு கலவி, ஒரு முத்தம் பெண்ணுக்கு போலவே ஆணுக்கும் நம்பிக்கையை கொடுக்கும்.

கோபப்படும் ஆணை கண்டால், அவன் உடற்கூட்டுக்குள் அழுது ஆர்ப்பரிக்கும் ஒரு தன்னந்தனி குழந்தையை கற்பனை செய்து கொள்ளுங்கள். இவை எதையும் இச்சமூகம் அனுமதிக்காதததால்தான், ஒரு வெட்டவெளி இரவில் வாய்விட்டு, ஓலமிட்டு, வான் பார்த்து, கதறி துடிக்க விரும்பி பயணிக்கிறான் எல்லா ஆணும்.

பெண்ணை போலவே ஆணும் ஒடுக்கப்படுபவன் தான். அவனுக்கும் தேவை கண்ணீர் துடைக்கும் ஒரு கை.

ஆகவே ஆண் அழலாம். தப்பே இல்லை.

banner

Related Stories

Related Stories