வைரல்

பெண்களுக்கு 33% ஒதுக்கீடு : பிரதமர் மோடி சொன்னது வெறும் வார்த்தை ஜாலம்.. பா.ஜ.க அரசின் நிலைப்பாடு என்ன?

பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு என்ற அரிய செயலைச் செய்து, பிரதமர் மோடி வரலாற்றில் இடம்பெற வேண்டும். அவர் சொன்னது வெறும் வார்த்தை ஜாலத்திற்காக என்றால், அவர் வாய்ச்சொல் வீரர் மட்டும்தான் !

பெண்களுக்கு 33% ஒதுக்கீடு : பிரதமர் மோடி சொன்னது வெறும் வார்த்தை ஜாலம்.. பா.ஜ.க அரசின் நிலைப்பாடு என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேள்வி: உலக மகளிர் தினத்தையொட்டி, காணொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “ பெண்களையும், ஆண்களையும் இந்த அரசு சமமாகக் கருதுகிறது“ என்று குறிப்பிட்டிருக்கிறாரே ?

பதில்: அது மட்டுமா? “ பெண்களின் முன்னேற்றம் நாட்டுக்கு வலிமை சேர்க்கும். நாட்டின் வளர்ச்சியில், பெண்கள் முழு பங்களிப்பு செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்றெல்லாம் பிரதமர், நிறைய சொல்லியிருக்கிறார்.

நாடாளுமன்றத்திலும், மாநில சட்ட மன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரமும், அதிகாரமும் அளித்திட வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போதே மேற்கொண்ட முயற்சி, ஒரு சிலர் உருவாக்கிய பிரச்சினைகளின் காரணமாக, நிறைவேறாமல், தொடங்கிய புள்ளியிலேயே நின்றுகொண்டிருக்கிறது.

பெண்களையும், ஆண்களையும் சமமாகக் கருதுவதாக பிரதமர் சொல்வது, அவரது உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து, மனசாட்சியின் வழி வெளிவருகிறது என்றால்; நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, உடனே சட்டம் கொண்டு வரலாமே ! தி.மு.க., அத்தகைய சட்டத்தை வரவேற்று ஆதரவு அளிக்குமே ! உள்ளபடியே பெண்கள் 50 சதவிகித இட ஒதுக்கீடுக்கு உரிமை உடையவர்கள்.

அதனாலேயே, தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் ஸ்டாலின் அரசு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களை அரசியல் ரீதியாக அதிகாரப்படுத்தியிருக்கிறது என்பதை அகில இந்தியப் பெண்ணுலகம் பெருமையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.

வெகுமக்கள் விரோதச் சட்டங்கள் பல, மோடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன; எதிர்ப்பு வலுத்ததும் சில சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன. பெண்களின் வலிமை, முன்னேற்றம், முன்னுரிமை, சமத்துவம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்துப் பேசியிருக்கும் பிரதமர் மோடி, நாடாளுமன்றத்திலும், சட்மன்றங்களிலும் முதலில் 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிடும் வகையில் சட்டம் இயற்ற முன்வர வேண்டும்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்ற அய்யன் திருவள்ளுவரின்வாக்குப்படி, பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு என்ற அரிய செயலைச் செய்து, பிரதமர் மோடி வரலாற்றில் இடம்பெற வேண்டும். அவர் சொன்னது வெறும் வார்த்தை ஜாலத்திற்காக என்றால், அவர் வாய்ச்சொல் வீரர் மட்டும்தான் !

banner

Related Stories

Related Stories