வைரல்

கொரோனா தொற்று தோன்ற உறைபனிகளில் புதைந்திருந்த வைரஸ்கள் காரணமா? - எச்சரிக்கும் காலநிலை மாற்றம்!

பறவைகளிலும் பன்றிகளிலும் வவ்வால்களிலும் ஆர்க்டிக் பனியிலும் இருந்த வைரஸ்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தை அதிகரிக்கும் வெப்பமும் இயற்கை அழிப்பும் ஏற்படுத்துகிறது.

கொரோனா தொற்று தோன்ற உறைபனிகளில் புதைந்திருந்த வைரஸ்கள் காரணமா? - எச்சரிக்கும் காலநிலை மாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இதோ வந்துவிட்டது, மீண்டும் ஒரு தொற்று.

ஒமைக்ரான்! கொரொனா வைரஸின் புதுப்பித்துக் கொண்ட வடிவம் இது என அறிவியலுலகம் சொல்கிறது. முந்தைய இரண்டு அலைகளைப் போல் இந்த அலையில் பாதிப்பு அதிகம் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒமைக்ரான் வைரஸின் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. கடந்த இரு அலைகளைக் காட்டிலும் வெகுவேகமாக ஒமைக்ரான் பரவுகிறது.

நோய்த்தன்மையின் வீரியம் குறைவாக இருந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு வந்து போகும் சாத்தியம் அதிகம் எனச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். தடுப்பூசிகளும் மரணங்களை மட்டுமே தடுக்கும் என்றும் நோய்வாய்ப்படுவதை தடுக்காது என்கிறார்கள். அடுத்தகட்ட பூஸ்டர் ஊசியை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை மூன்று அலைகள். சரியாக வருடம் தொடங்கும்போதே வைரஸ் பரவல் தொடங்கி விடுகிறது. மூன்று வருடத் தொடக்கமும் கொரோனாவை ஏந்தியே தொடங்கியிருக்கிறது. இனியும் இத்தகைய வைரஸ்கள் தொடருமென்பதே அறிவியலுலகம் மனிதர்களுக்கு தரும் அச்சுறுத்தும் செய்தியாக இருக்கிறது.

காலம் காலமாக வைரஸ்களுடன் புழங்கிக் கொண்டிருந்த மனிதனுக்கு இப்போது ஏன் இத்தனை நெருக்கடி?

Permafrost!

தமிழில் உறைபனி என சொல்லலாம்.

சீனா மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் 2015ம் ஆண்டில் திபெத் நாட்டில் ஒரு முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். உருகும் பனிப்படலங்களே அவர்களின் ஆராய்ச்சிக்கான களம். 164 அடிகளுக்கு உறைபனி படலத்தில் துளை போட்டனர். 15000 வருடங்களாக உறைந்திருந்த பனிப்படலம் அது. உறைபனியின் ஆழத்தில் இருந்த பனிப்படலங்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய பனிப்படலத்தின் ஆழத்தில் நுண்ணுயிர்கள் இருந்தன.

கொரோனா தொற்று தோன்ற உறைபனிகளில் புதைந்திருந்த வைரஸ்கள் காரணமா? - எச்சரிக்கும் காலநிலை மாற்றம்!

வைரஸ்கள்!

ஆய்வுக்கு எடுத்துச் சென்ற படலங்களில் மட்டும் 33 வகை வைரஸ்கள் இருந்தன. அவற்றில் 28 வைரஸ் வகைகள் அறிவியல் அறிந்திராதது. அதாவது மனிதன் உலகையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்வதற்கென உருவாக்கிக் கொண்ட அறிவியலுக்குள் அந்த வைரஸ்கள் இல்லை. மனிதப் பரிணாமத்துக்கும் முந்தைய காலத்திலிருந்து பனிக்குள் பாதுகாப்பாக இருந்த வைரஸ்கள் அவை.

திபெத் தொடங்கி ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகள் வரை உலகின் பல இடங்களில் உறைபனி உண்டு. பனி மலைகளாக, பனித் தீவுகளாக இன்னும் பல வடிங்களாக உறைபனி உறங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பனிப்பாறைகள் யாவும் மனிதன் உருவானதற்கும் முந்தைய காலத்திலிருந்து இருந்து வருபவை. இவை கொண்டிருக்கும் நுண்ணுயிர்களும் வைரஸ்களும் மனித இனத்தின் காலத்துக்கும் முந்தையவை. மனிதனை அவை அறிந்ததில்லை. மனிதனும் அவற்றை கண்டதில்லை.

காலத்தால் பிரிந்திருந்த இரண்டு உயிர்கள் ஒன்று சேர நேர்கையில் என்ன நடக்கும்?

எதிர்பார்த்திராத எல்லாமும் நடக்கும்!

ஆய்வுகளின்படி வைரஸ்கள் பல்லாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் ஆற்றல் பெற்றவை. 2014ஆம் ஆண்டில் 30,000 வருட பழமையான வைரஸ் சைபீரிய நாட்டிலிருந்த உறைபனியில் கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தோன்ற உறைபனிகளில் புதைந்திருந்த வைரஸ் காரணமாக இருக்குமா?

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் உலகெங்கும் திடுமென பரவி கொரோனா இன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் எல்லா சாத்தியங்களையும் ஆராய்வதே மனித இனத்துக்கு உபயோகப்படும் விஷயமாக இருக்க முடியும்.

கடைசியாக நீங்கள் பார்த்த காடு எங்கே என யோசித்து பாருங்கள். இப்போது அங்கே காடு இருக்கிறதா எனச் சென்று பாருங்கள். உங்கள் ஞாபகத்தில் இருக்கும் காடு அழிக்கப்பட்டிருக்கும். எத்தனை ஆறுகள், நதிகள், ஓடைகள் நாம் கொண்டிருந்தோம்? இன்று அவை எதுவுமே இல்லை.

இங்கெல்லாம் வாழும் உயிரினங்கள் தற்போது எங்கு வாழும்?

ஐ.நா சபையின் அறிக்கையின்படி, மனித வாழ்க்கைகளாலும் அரசுத் திட்டங்களாலும் பிற உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு தற்போதைய நிலையில், பத்து லட்சம் உயிரின வகைகள் அழியும் நிலையில் இருக்கின்றன. அழிவை நேரடியாக எதிர்நோக்கியிருக்கும் உயிரினங்கள் தம் உயிரைக் காப்பாற்றவென பல வழிகளில் வாழ்விடங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. காடுகளிலும் நீர்நிலைகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த உயிரினங்கள் அவை அழிக்கப்படும் வேளையில் வேறு வழியே இல்லாமல் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் பிரவேசிக்கின்றன. மனிதனின் அன்றாட வாழ்க்கைக்குள்: தங்களின் தடங்களை பதிக்கின்றன. பிற உயிரினங்களுக்குள் இருக்கும் நுண்ணுயிர்கள் மனிதனுக்கு பரவும் சாத்தியங்கள் அதிகமாகின்றன.

உறைபனியில் உறங்கியிருந்த வைரஸ்களும் பிற உயிரினங்களுக்குள் இருக்கும் வைரஸ்களும் மனிதனை இன்று அடைவதற்கான காரணம், காலநிலை மாற்றம்! பறவைகளிலும் பன்றிகளிலும் வவ்வால்களிலும் ஆர்டிக் பனியிலும் இருந்த வைரஸ்கள் வெளியேற வேண்டியக் கட்டாயத்தை அதிகரிக்கும் வெப்பமும் இயற்கை அழிப்பும் ஏற்படுத்துகிறது.

காலநிலை மாற்றம் கொண்டு வந்திருக்கும் நிலையிலிருந்து கொரோனா வைரஸ் மிக நெருக்கமான தூரம். 2030ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ்ஸுக்குள் உலக வெப்பம் நிறுத்தப்பட்டு குறைக்கப்பட வேண்டுமென்கிற நிலையில் இன்று நாம் எங்கு நிற்கிறோம் தெரியுமா? 1.3 டிகிரி செல்சியஸ்ஸில். அதாவது 2015ஆம் ஆண்டிலிருந்து வெறும் ஏழு வருடங்கள்தான் கழிந்திருக்கின்றன. 1.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருக்கிறது. இன்னும் எட்டு வருடங்களில் புள்ளி 2 டிகிரி செல்சியஸ்ஸுக்குள் உலக வெப்பத்தை நிறுத்த வேண்டும்.

முடியுமா?

ஒவ்வொரு முறை வைரஸ் வரும்போதும் ஊரடங்குக்குள் செல்லும் உலகம் கொஞ்சம் சரியானதும் மீண்டும் வெகுண்டெழுந்து இயற்கை அழிப்பை பெரும் வேகத்தில் செய்யத் தொடங்குகிறது. மீண்டும் மீண்டும் இயற்கை மழைப்பொழிவு முதலிய இயற்கைப் பேரிடர் மற்றும் வைரஸ் போன்ற சுகாதாரப் பேரிடர் ஆகியவற்றின் வழியாக காலநிலை மாற்றத்தை நமக்கு அறிவித்துக் கொண்டே இருக்கிறது. நம்முடைய வாழ்நிலை மட்டும் மாற்றாமல் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

எல்லாம் கைவிஞ்சிப் போகும் கட்டத்தில் இயற்கை, மனிதனை ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே மிச்சம் வைக்கும்.

அது நாம் கேட்க விரும்பாத வார்த்தையாக இருக்கும்!

banner

Related Stories

Related Stories