வைரல்

மாணவர்களுடன் தினமும் பள்ளிக்குச் செல்லும் ‘சின்சியர் குரங்கு’: ஆச்சரியத்தில் ஆந்திர மக்கள்! (வீடியோ)

ஆந்திராவில் குரங்கு ஒன்று தினமும் மாணவர்களுடன் பள்ளிக்குச் சென்று பாடத்தை கவனித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு மாணவர்களுடன் பாடத்தை கவனிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மாணவர்களுடன் தினமும் பள்ளிக்குச் செல்லும் ‘சின்சியர் குரங்கு’: ஆச்சரியத்தில் ஆந்திர  மக்கள்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வெங்களம்பள்ளி என்ற கிராமத்தில், அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு ‘மந்தி’ வகையைச் சேர்ந்த குட்டிக் குரங்கு ஒன்று தினமும் மாணவர்களுடன் பள்ளிக்குச் சென்று வியப்புக்குள்ளாக்கி வருகிறது.

முதலில் பள்ளிக்குள் குரங்கு வருவதைக் கண்ட மாணவர்கள் அச்சத்தில் அதை விரட்டியுள்ளனர். ஆனால், அங்கிருந்து போக மறுத்த குரங்கு, மாணவர்கள் இருக்கும் பகுதியை மீண்டும் மீண்டும் சுற்றிவந்துள்ளது. ஒருகட்டத்தில், திண்படங்களை வழங்கி குரங்குடன் மாணவர்கள் நட்பு பாராட்ட தொடங்கினர்.

தங்கள் நட்பு வட்டத்தில் ஒன்றிவிட்ட குரங்கிற்கு மாணவர்கள் வைத்த பெயர் லட்சுமி. மதிய உணவு நேரத்தின் போது மாணவர்களுடன் இணைந்து குரங்கும் சாப்பிடும். மாணவர்களும் தாங்கள் கொண்டு வரும் உணவை குரங்கிற்கு கொடுத்து மகிழ்கிறார்கள்.

ஆசிரியர் பாடம் எடுக்கும் நேரங்களில், மாணவர்களுக்குத் தொல்லைக் கொடுக்காமல் குரங்கும் அவர்களுடன் அமைதியாக பாடத்தை கவனிக்கிறதாம். மாணவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்காத குரங்கை ஆசிரியர்களும் விரட்டுவதில்லை.

குரங்கு லட்சுமி குறித்து அப்பள்ளி மாணவர் ஒருவர் கூறியதாவது, “லட்சுமி தான் பள்ளியில் மூத்த மாணவி. அது பள்ளிக்கு வந்து செல்வதில் சின்சியராக இருக்கும். காலை பள்ளி ஆரம்பிக்கும் போது வரும். பகல் முழுவதும் பள்ளியில் மாணவர்களுடன் இருந்துவிட்டு, மாலை பள்ளி முடியும் நேரத்தில் காட்டுப் பகுதிக்குச் சென்றுவிடும். யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காகாது”என அந்த மாணவர் கூறினார்.

அதுமட்டுமின்றி பள்ளி விடுமுறை நாட்களில் அப்பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு லட்சுமி சென்று விடுவிமாம். சில நேரம் ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து வந்து குரங்கிற்குச் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடும் செய்கிறார்களாம். சக மாணவர்களைப் போலத் தினமும் பள்ளிக்குச் செல்லும் குரங்கை அப்பகுதி மக்கள் அச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories