தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11% குறையக் காரணம் என்ன? : த.வெ.க அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி!

மூலதனச் செலவினம் சரிவடையும்போது, அதன் விளைவுகளை அன்றாடம் எதிர்கொள்ளப் போவது சாமானிய மக்கள்தான் என்பதை அரசு உணர வேண்டாமா?

தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11% குறையக் காரணம் என்ன? : த.வெ.க அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2026-27 நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் 11% குறைந்து ரூ.14,836 கோடியாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம் கர்நாடகா 50.9% (ரூ.27,073 கோடி),உத்தரப் பிரதேசம் 22.6% (ரூ.39,309 கோடி) வளர்ச்சிப்பாதையில் சென்றுள்ளது. தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய இருமாநிலங்கள் மட்டுமே மூலதனச் செலவு சரிந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11% குறையக் காரணம் என்ன? என திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறுமாத காலத்தில் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் 11% சரிந்துள்ளதாக ‘ தி இந்து- பிசினஸ் லைன்’ இதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கின்றது.

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் கர்நாடகா (+51%), உத்தரப் பிரதேசம் (+23%), ராஜஸ்தான் (+21%), மகாராஷ்டிரா (+5%) போன்ற மாநிலங்கள் மூலதனச் செலவுகளைப் பொறுத்து வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது, தமிழ்நாடு மட்டும் (-11%) பின்னடைவைச் சந்தித்துள்ளது கவலை அளிக்கின்றது.

கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்டுள்ள இந்த செலவுகள் கூட கடந்த கழக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கானவையாக இருக்கக்கூடிய நிலையில், இந்த அரசு எந்த புதிய பணிகளையும் மேற்கொள்ளாதது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சாலைகள், குடிநீர் வசதிகள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற, மக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் செய்யப்படும் முதலீடாக இருக்கும் மூலதனச் செலவினம் சரிவடையும்போது, அதன் விளைவுகளை அன்றாடம் எதிர்கொள்ளப் போவது சாமானிய மக்கள்தான் என்பதை அரசு உணர வேண்டாமா?

தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11% குறையக் காரணம் என்ன? பட்ஜெட்டில் மூலதனப் பணிகளுக்கு ஒதுக்கிய நிதியில், இதுவரை இந்த அரசு எந்தெந்தத் துறைகளில், எவ்வளவு நிதியினைச் செலவிட்டிருக்கின்றது? எத்தனைப் புதிய பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன? எந்தெந்தத் துறைகளில் செலவினம் தேக்கமடைந்துள்ளது? அத்தகைய தேக்க நிலைக்கான காரணம் என்ன?

ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனைப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை? அவை தொடங்கப்படாததற்கான காரணங்கள் என்ன? இவற்றுக்குச் செலவிடப்படவேண்டிய நிதி ஆதாரங்கள் வேறு என்ன திட்டங்களுக்காகச் செலவிடப்படுகின்றன? என்பன போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.

இவற்றுக்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்து மக்களிடம் உண்மை நிலையை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டிய கடமை அரசிற்கு இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories