முரசொலி தலையங்கம்

தவெக எம்எல்ஏ மீது எந்த புகாரும் இல்லையா? ; எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதில் என்ன தவறு? : முரசொலி கேள்வி!

ஜூலை மாதம் 31 ஆம் தேதி ஆட்சித் தலைமைக்குப் புகார் சொல்லி இருக்கிறார் பெண் மாவட்ட ஆட்சியர். நவம்பர் கடைசி வரை நடவடிக்கை இல்லை.

தவெக எம்எல்ஏ மீது எந்த புகாரும் இல்லையா? ;
எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதில் என்ன தவறு? : முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (28-11-2026)

எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதில் என்ன தவறு?

‘‘எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது தவறு. அவர் பேட்டிகளை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று நீதிமன்றத்தில் போய் சொல்லி இருக்கிறது த.வெ.க. அரசு. அவர் பேசியதில் எது தவறு என்று சொல்ல வேண்டாமா?

உண்மையை, நாட்டில் நடந்ததைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் பேட்டியாகக் கொடுத்தார்கள். அதுவும் காவல் துறை தலைமை இயக்குநருக்கு மனு கொடுத்து விட்டு டி.ஜி.பி. அலுவலக வாசலில் வைத்துதான் பேட்டி கொடுத்தார்கள். அதில் எது பொய்?

த.வெ.க. எம்.எல்.ஏ. மீது எந்தப் புகாரும் இல்லையா? பெண் மாவட்ட ஆட்சியர் புகார் தொடுத்துள்ளாரே? அத்தகைய எம்.எல்.ஏ. பற்றிப் பேசுவதில் என்ன தவறு?

விரும்பத்தகாத செயல்பாடுகளைக் கொண்ட பாலியல் துன்புறுத்தல், பாலியல் சாயல் கொண்ட கருத்துகளைத் தெரிவித்து துன்புறுத்தல், பின் தொடர்ந்து துன்புறுத்துவது, ஒரு பொது ஊழியர் அவரின் கடமையைச் செய்வதைத் தடுக்கும் வகையில் செயல்படுவது ஆகிய பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்ட ஒருவரைப் பற்றிதான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகிறாரே தவிர, வேறு யாரைப் பற்றியும் பேசவில்லை.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியும் பாலியல் தொல்லைகள் கொடுத்தும் நான்கு மாத காலமாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ‘தூயசக்தி’ விஜய். இன்றைக்கு நீதிமன்றம் கையில் எடுத்த பிறகுதான் ஆக்ஷன் எடுப்பதைப் போன்ற நாடகத்தை விஜய் நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆக்ஷன் இன்னமும் எடுக்கப்படவில்லை. ‘நாடகம்’ மட்டுமே நடக்கிறது.

ஜூலை மாதம் 31 ஆம் தேதி ஆட்சித் தலைமைக்குப் புகார் சொல்லி இருக்கிறார் பெண் மாவட்ட ஆட்சியர். நவம்பர் கடைசி வரை நடவடிக்கை இல்லை. இது தொடர்பான வழக்கு நவம்பர் 22 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது காவல் துறை என்ன தகவல் தந்தது?

‘‘மாவட்ட ஆட்சியர் அப்படி எந்தப் புகாரும் இதுவரை தரவில்லை. தலைமைச் செயலாளர் உள்பட யாரிடமும் புகார் தரவில்லை’’ என்று சொன்னது காவல் துறை தரப்பு. உண்மையை எந்தளவுக்கு காவல் துறை மறைக்கிறது என்பது இதன் மூலம் தெரியவில்லையா?

தேசிய மகளிர் ஆணையம் தானே முன் வந்து விசாரணையை நடத்திக் கொண்டு இருக்கும் போது த.வெ.க. காவல் துறை, ‘அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்கிறது. இதுதான் பெண்களுக்குப் பாதுகாப்புத் தரும் லட்சணமா?

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவல் துறை அதிகாரி விசாரணை நடத்திக் கொண்டு இருக்கும் போது அதைக் குலைக்கும் நோக்கத்தோடு த.வெ.க. அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இதன் நோக்கம் என்ன? பெண் மாவட்ட ஆட்சியர் என்ன ஆதாரங்கள் வைத்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வதும், அவர் நீதிமன்ற விசாரணையில் என்ன எல்லாம் சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதும்தான்.

தவெக எம்எல்ஏ மீது எந்த புகாரும் இல்லையா? ;
எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதில் என்ன தவறு? : முரசொலி கேள்வி!

இப்போது அக்கறையோடு விசாரணைக் கமிஷன் அமைக்கும் விஜய், நான்கு மாத காலமாக என்ன செய்து கொண்டு இருந்தார்? அதை மறைக்கும் செயலைத்தான் செய்து கொண்டு இருந்தார். இன்னும் சொன்னால் பாலியல் முறைகேடுகளைச் செய்த தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை அழைத்து பட்டு வேட்டி சட்டை கொடுத்து, தீபாவளி வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைத்தவர் தான் விஜய்.இவருக்கு எல்லாம் இந்த நாட்டில் யாரைப் பற்றியாவது பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறதா?

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பெண் நீதிபதி, தனது கோபத்தை ஒரு மேடையில் வெளிப்படுத்தினார். அதன் பிறகு இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. ‘’ஒருவேளை மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது” என்று நீதிபதி வெளிப்படையாகக் கண்டித்தார். அதன் பிறகுதான் விசாரணை நடத்தத் தொடங்கியது த.வெ.க. அரசு.

த.வெ.க. அரசு அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகமே? யோக்கியர்களாக இருந்தால் முதலில் அருள் விக்னேஷ் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைக் கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகச் சொல்லி இருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை விஜய்.

உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு, த.வெ.க. அரசே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்கிறார்கள் என்றால் உண்மையை மறைக்கவே முயற்சிக்கிறார்கள் என்று பொருள்.

மாவட்ட ஆட்சியரை அங்கிருந்து மாற்ற தலைமைச் செயலாளர் முயற்சித்ததாக ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியே பொதுவெளியில் சொல்லி இருக்கிறார். பெண் மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து சிலர் மிரட்டி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

‘இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டும்’ என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி சொல்வதில் என்ன தவறு?

‘குற்றத்தை மூடி மறைத்த தலைமைச் செயலாளர் சாய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதில் என்ன தவறு?

‘விஜய் ஆட்சியில் உண்மை வெளி வராது, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதில் என்ன தவறு?

banner

Related Stories

Related Stories