
சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரம்மநாயகம் (55). திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட இவர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (ஊரக வளர்ச்சி) பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அரசு தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு டியூசனும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அங்கு டியூசன் வகுப்பிற்கு வந்த 15 வயது 10-ம் வகுப்பு மாணவியிடம் கடந்த ஓராண்டாக தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் தோழி அந்த மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரம்மநாயகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பத்தாம் வகுப்பு மாணவியிடம் இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து பிரம்மநாயகத்தின் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போக்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பிரம்மநாயகம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த போது பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பது குறித்த பணிகளில் அதிகாரியாக இருந்து செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பி, மது போதையில் வீட்டிற்குள் புகுந்து தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டது அரசு பணியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






