தமிழ்நாடு

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா : நவ. 30-ல் கூடுகிறது நாடாளுமன்றம் - மகளிர் இடஒதுக்கீட்டில் அதிரடி!

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா : நவ. 30-ல் கூடுகிறது நாடாளுமன்றம் - மகளிர் இடஒதுக்கீட்டில் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Muthukrishnan
Updated on

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட அறிவிப்பின்படி, நவம்பர் 30-ஆம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ஆம் தேதி மாநிலங்களவையும் மீண்டும் கூட உள்ளன.

அரசின் முக்கிய அலுவல்களை மேற்கொள்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது.

கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மக்களவையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் தோல்வியடைந்தது.

இதையடுத்துத் தொகுதி மறுவரையறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட முன்வடிவங்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது புதிய திருத்தங்களுடன் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்குப் பிறகே இடஒதுக்கீடு அமலுக்கு வரும் வகையில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தற்போதைய முயற்சியில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், தொகுதி மறுவரையறை காரணமாக மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

குறிப்பாக, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அவசியம்.

ஏற்கெனவே தோல்வியைச் சந்தித்த மசோதாவை மீண்டும் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவது மத்திய அரசுக்கு முக்கியச் சவாலாக இருக்கும்.

நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பது தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories