
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு, த.வெ.க. ஆட்சியில் முதலமைச்சர் விஜயால் அண்மையில் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும், இதுவரை யாரும் கேள்விப்படாத 'அகல் விளக்கு பதிப்பகம்' மற்றும் 'பீனிக்ஸ் பதிப்பகம்' ஆகியவற்றின் நூல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் ஆகிய ‘எழுத்தாளர்களின்’ பெயர்களைப் பார்த்துப் புத்தக வாசகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகே இந்தப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையும் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது. புத்தகங்களில் முத்திரையிடப்பட்டுள்ள (சீல்) தேதி விஜயின் பிறந்த நாளான மார்ச் 22 என உள்ளது. இதிலிருந்தே உண்மை என்னவென்று தெரிகிறது.
ஆனால், தி.மு.க. மீது த.வெ.க. அமைச்சர்கள் வீண்பழி சுமத்தி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையிலும் இது குறித்து தி.மு.க. புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; இதன் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், "தி.மு.க-வின் AI ஊழல்" எனப் போகும் இடமெல்லாம் பேசும் அமைச்சர் ராஜ்மோகன் பொய் சொல்கிறார் என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. "போலி AI நூல் கொள்முதலுக்கு அதிகாரியே காரணம்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் த.வெ.க. அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தி.மு.க. மீது பொய்யான தகவல்களைப் பரப்பிய அமைச்சர் ராஜ்மோகன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "தான் ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்பதை மறந்து, த.வெ.க. கட்சியின் ஊதுகுழலாகச் செல்லும் இடமெல்லாம் தி.மு.க. மீது வீண்பழி சுமத்திவிட்டு, இன்று நீதிமன்றத்தில் அரசின் சார்பாக நூலக இயக்குநர்தான் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
அப்படியெனில், பொதுவெளியில் 'DMK AI Scam' என தி.மு.க. மீது பொய் பரப்பிய ராஜ்மோகன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






