
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ (DRI) திருச்சி மண்டல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில், பூபாலன் மற்றும் அவரது நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் ஆகியோரது வீடுகளில் ஐந்து பேர் கொண்ட டிஆர்ஐ அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனையில், 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட பூபாலன் மற்றும் சுகன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் தவெக அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் சூழலில், தவெக முக்கிய நிர்வாகியின் வீட்டில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?

ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.






