
தமிழ்நாட்டில் ஏமாற்றத்தைத் தரும் மாற்றத்தை வழங்கி, அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை, மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்து வருகிறது த.வெ.க அரசு.
அதன் தொடர்ச்சியாக தற்போது, தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்களையே வெளிப்படையாக தெரிவிக்காத அவல நிலைக்கு தமிழ்நாட்டை தள்ளியுள்ளது விஜய் அரசு.
இதனைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு பின்வருமாறு,
தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.

அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.
வெளிப்படையான ஆட்சியைத் தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய ஆலோசகர்கள் நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை அனைத்து அரசாணைகளையும் ஒளித்து வைப்பது ஏன்?
ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?
உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.
உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்.






