
திராவிட மாடல் ஆட்சியின் போது தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைந்து கொண்டே வந்தது. அதற்குக் காரணம், திறம்பட்ட நிர்வாகம் நடைபெற்றது. அதனால் பணவீக்கம் குறைந்தது. இன்றைக்குப் பணவீக்கம் அதிகமாகி வருகிறது. இன்றைய த.வெ.க. அரசின் நிர்வாகச் சுணக்கம், மெத்தனம், திறமையின்மை, அலட்சியம்தான் இதற்கு முழு முதல் காரணம் ஆகும்.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தன்னைத் தக்க வைத்துக் கொண்டது.
மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டது. தொடர்ச்சியாக இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வந்தது. இந்தச் செயல்பாடு, மாநிலத்தின் வலுவான கொள்கைக் கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு வலிமைகளை எடுத்துக்காட்டி, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்னணிப் பங்களிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் காட்டியது.
‘கோவிட்’ காலத்துக்கு முந்தைய காலத்தைவிட அதிக வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சியானது அடைந்தது. இலக்கு வைக்கப்பட்ட நிதி நடவடிக்கைகள் மற்றும் தொழில்துறைக் கொள்கையின் ஆதரவுடன் இது செயல்படுத்திக் காட்டப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகள் இதனை உருவாக்கித் தந்தது. அந்நிய நேரடி முதலீடுகளுக்கான (FDI) ஒரு முன்னணி இடமாகவும் தமிழ்நாடு அப்போது உயர்ந்தது.
அனைத்துத் துறை வளர்ச்சியின் மூலமாக மாநில வளர்ச்சியை உறுதி செய்தார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மக்கள் வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதை உறுதி செய்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின். இது மக்களின் சமூக வாழ்வியலை வளர்த்தது. தனிநபர் வருமானம் கூடியது. உற்பத்தி கூடியது.
வேளாண்மை அதிகரித்தது. விலைவாசி குறைந்தது. தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்த சமூக நலத் திட்டங்கள் மூலமாக மக்கள் தன்னிறைவு அடைந்தார்கள். ஒன்றிய அரசின் சமூக வளர்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டினார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கட்டணமில்லா பேருந்துப் பயணம் – மகளிருக்கு உரிமைத் தொகை – காலை உணவுத் திட்டம் – தமிழ்ப்புதல்வன் – புதுமைப்பெண் – நான் முதல்வன் – உடலினை உறுதி செய் – மக்களைத் தேடி மருத்துவம் – நம்மைக் காக்கும் 48 – வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை – குறுவைத் தொகுப்புகள் – கட்டணமில்லா மின் இணைப்புகள் – மாற்றுத் திறனாளிகள் நலன் – மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவிகள் – விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்கள் போன்றவை காரணமாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஏதாவது ஒரு திட்டத்தின் பலன் போய்ச் சேர்ந்தது. இவை அனைத்தும் சேர்ந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது.

இந்தியாவின் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் பண வீக்கம் குறைந்த போதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பணவீக்கம் குறைவு என்று புள்ளிவிபரம் வந்த போதும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் எழுதியது என்ன தெரியுமா?
‘தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் சமூக நலத்திட்டங்கள் தான் இதற்குக் காரணம்’ என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் எழுதின.
திராவிட மாடல் ஆட்சியின் சமூக நலத் திட்டங்களால் வறுமை ஒழிந்தது. பட்டினிச் சாவுகள் இல்லை. புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. தனிநபர் வருமானம் அதிகம் ஆனது. கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தனிநபர் வருமானம் உயர்ந்த மாநிலம் ஆனது. இதன் காரணமாகத்தான் பணவீக்கம் குறைந்தது. இத்தகைய பெரும் சாதனையை ஆறு மாதத்துக்கு முன்பு வரை பார்த்தோம். இப்போது எதிர்மறையாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் த.வெ.க. ஆட்சியில்.
இந்தியாவிலேயே சில்லறைப் பணவீக்கம் அதிகமான மாநிலமாக இப்போது தமிழ்நாடு ஆகி இருக்கிறது. சில்லறைப் பணவீக்கம், உணவுப் பணவீக்கம் ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனை ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கடந்த 12 ஆம் தேதியன்று அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பணவீக்கத்தில் தெலங்கானா முதலிடத்தில் இருந்தது. தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது. இப்போது தமிழ்நாடு பணவீக்கத்தில் முதலிடத்துக்கு வந்து விட்டது. பணவீக்கம் 6 விழுக்காடு இருக்கலாம் என்பது ரிசர்வ் வங்கியின் கணிப்பு ஆகும். ஆனால் தமிழ்நாட்டின் இப்போதைய பணவீக்கம் 6.81 விழுக்காடு ஆகிவிட்டது.
இந்தியாவின் மொத்த பணவீக்கம் 5.54 விழுக்காடுதான். ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் 6.81 விழுக்காடு ஆகும். இந்திய சராசரியை விட, ரிசர்வ் வங்கியின் அளவுகோலை விட அதிகம் ஆகிவிட்டது.
உணவுப் பொருட்களின் விலை உயர்விலும் இன்று தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. உணவுப் பணவீக்கமானது 10.62 விழுக்காடாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய விழுக்காடு என்பது 7.74 விழுக்காடுதான். அதை விட தமிழ்நாடு அதிகம் ஆகி வருகிறது. அரிசி, பருப்பு மட்டுமல்ல, அனைத்துப் பொருட்களின் விலையும் மிக மிக மிக அதிகம் ஆகிவிட்டது.

ஆனால், ‘உணவுப் பொருள் விலை உயரவே இல்லை’ என்கிறார் உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன். இப்படி ஒருவர் அமைச்சராக இருக்கிறார் என்பதை இதன்மூலமாக தமிழ்நாடு தெரிந்து கொண்டது. இவர் எங்கே போய் பார்த்தார், யாரிடம் விசாரித்தார் என்பதைவிட இத்தனை நாட்கள் எங்கே இருந்தார் என்றுதான் கேட்க வேண்டும்.
மின்வெட்டுக்கு என்ன காரணம் என்றால் ‘காற்று இல்லை’ என்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா . பேருந்துகளை ஏன் விடவில்லை என்றால், ‘நான் சாப்பிடவில்லை’ என்கிறார் அமைச்சர் தமிழ் பார்த்திபன். எந்தக் கேள்வி கேட்டாலும் ‘வணக்கம்’ மட்டும் வைக்கிறார் அமைச்சர் ஆனந்த். எவரும் அவர் துறைக்கு பொறுப்பு ஏற்பது இல்லை. ‘நமக்கு ஒரு கார் கிடைத்துவிட்டது’ என்று போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
முதலமைச்சர் பதவியை வைத்து என்ன செய்வது என்று முதலமைச்சராக வந்தவருக்கும் தெரியவில்லை. தனிமையில் இனிமை கண்டு வருகிறார். அவருக்கும் அமைச்சர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை. அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லை. இத்தகைய மந்தநிலை தான் பணவீக்க உயர்வுக்குக் காரணம்.
‘அது அது, அதனதன் போக்கில் போகிறது’ என்பார்களே, அப்படி நாடு போய்க் கொண்டு இருக்கிறது. திறமையற்றவர்கள், சிந்தனை யற்றவர்கள் கையில் மாநிலம் போனால் என்ன ஆகும் என்பதைத்தான் தமிழ்நாட்டில் இப்போது பார்க்கிறோம்.






