தமிழ்நாடு

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!

மூடப்பட்ட 717 மதுக்கடைகளும் மாற்று இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதா? என கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? 'Don’t Close The Tasmac மா... Atleast Open the Back Dooru' என்ற சினிமா பாடல் பாணியில் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டு 'பெண்களுக்கு தாய்மாமனாக இருப்பேன்' என நீங்கள் சொல்லலாமா? என த.வெ.க அரசுக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் விஜய். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில கடைகள் மூடப்பட்டது. தற்போது ஓட்டபிடாரம் தொகுதி துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் கிராமங்களுக்கான பேருந்து நிறுத்தம் அருகே புதிய மதுக்கடையோடு , மனமகிழ் மன்றங்களையும் திறந்திருக்கிறார்கள்.

முன்வாசலை மூடிவிட்டு பின்வாசலை திறப்பதுபோல கடைகளை மூடிவிட்டு பின்னர் புதிதாக மதுக்கடைகளை திறந்து வருகிறது இரட்டை வேட தவெக அரசு.இதுதான் மதுக்கடைகளை குறைக்கும் லட்சணமா மிஸ்டர் விஜய்? தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய கடை மீண்டும் திறக்கப்பட்டது ஏன்.. திறக்கச் சொன்னது யார்.. அப்படியென்றால் மூடப்பட்ட 717 மதுக்கடைகளும் மாற்று இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதா?

துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் ஆகிய மூன்று கிராம மக்களுக்கும் பொதுவான பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் பொதுவெளியில் மது அருந்துவது, இருதரப்பு மோதிக் கொள்வது, நடமாடும் சாமானியர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறுவதால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது. முன் பக்கம் மதுகடையும், அதன் பின்புறம் பார் மற்றும் மனமகிழ் மன்றமும் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

மதுக்கடையை மூட வேண்டும் என் அப்பகுதி மக்கள் அமைச்சர் பெருமக்களிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் போட்டு ஊர் மக்களிடமும் எட்டு நாட்களுக்கு கடை மூடப்பட்டிருக்கும் பின்பு கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டது. ஆனால் எந்த உறுதியும் பின்பற்றப்படவில்லை உடனே மறுநாளே பின்வாசல் வழியாக மது விற்பனை ஜோராக நடக்கிறது. சமாதான கூட்டம் போட்டு பொதுமக்களை ஏமாற்றுகிறது இந்த அரசு. நியாயமான கோரிக்கையுடன் போராடும் மக்களின் கோரிக்கைகளை தவெக அரசு அலட்சியமாக கையாள்வது கடும் கண்டனத்துக்குரியது.

'Don’t Close The Tasmac மா... Atleast Open the Back Dooru' என்ற சினிமா பாடல் பாணியில் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டு 'பெண்களுக்கு தாய்மாமனாக இருப்பேன்' என நீங்கள் சொல்லலாமா?

அண்ணனாக, தம்பியாக, தாய்மாமனாக இருப்பேன் என வசனத்தை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 10060 எண் கொண்ட மதுக்கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories