தமிழ்நாடு

“இனி நீதிமன்றங்கள் முன்புதான் மக்கள் போராடுவார்கள்” : சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டுவது என்ன?

மக்களின் நியாயமான போராட்டங்களைத் தொடர்ந்து முடக்க முடக்க, அது அரசுக்கு எதிரான அதிருப்தியைத்தான் அதிகமாக்கும்.

“இனி நீதிமன்றங்கள் முன்புதான் மக்கள் போராடுவார்கள்” : சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "எங்கள் கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையால் கடும் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இந்த ஆலையை மூடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி இந்த ஆலை மூடப்பட வேண்டிய ஒன்றுதான்; எனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இது தொடர்பாக உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்' என கடந்த 2010ஆம் ஆண்டே உத்தரவிட்டது.

ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி இந்த ஆலை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்களுக்குப் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மாசடைந்த சூழலைச் சுட்டிக்காட்டியும் சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறைக்கு விண்ணப்பித்தோம்.

ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி மறுத்து, எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. எனவே, சுடுகாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது" எனத் தெரிவித்து மறுப்பு தெரிவித்தார்.அரசுத் தரப்பின் வாதத்தைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி குறுக்கிட்டுக் காரசாரமான கேள்விகளை எழுப்பினார்.

நீதிபதி தனது கருத்தில், "மாசுவினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சுடுகாட்டில் மக்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் காவல்துறைக்கு என்ன பிரச்சினை உள்ளது? தற்காலத்தில் மாசுவினால்தான் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தங்கள் பகுதியில் நிலவும் மாசின் கொடூரத்தை அரசுக்கு உணர்த்துவதற்காகவே மக்கள் சுடுகாடு என்ற சரியான இடத்தை போராட்டத்திற்காகத் தேர்வு செய்துள்ளனர். அங்கு மக்கள் போராட்டம் நடத்துவதால், இறந்துபோனவர்களின் ஆவிகள் வந்து ஏதேனும் பிரச்சினை செய்யப் போகிறதா? மக்களின் நியாயமான போராட்டங்களைத் தொடர்ந்து முடக்க முடக்க, அது அரசுக்கு எதிரான அதிருப்தியைத்தான் அதிகமாக்கும்.

தற்போதைய ஆட்சியில் திக, திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என யார் அனுமதி கேட்டாலும் காவல்துறை வழங்குவதில்லை. ஏன், ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் கூட போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை; அவர்களும் நீதிமன்றத்தைத்தான் நாடுகிறார்கள். இப்படி எங்குமே போராட்டம் நடத்த அனுமதிக்க மாட்டீர்கள் என்றால், மக்கள் உயர் நீதிமன்றத்தின் முன்புதான் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டியிருக்கும்" என மிகக் கடுமையாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இது குறித்து அரசின் உயர்மட்டக் கருத்தைக் கேட்டுத் தெரிவிப்பதாகக் காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories