
சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) மூலமாக நடந்துள்ளதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்தும், இதற்கு காரணமான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் டெல்லி மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தினந்தோறும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
ஆனால், அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத ஒன்றிய பா.ஜ.க. அரசு, காவல்துறையை ஏவிப் போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து அராஜகமாக நடந்து கொள்கிறது.
நாடே SIR-க்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது; டெல்லி காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்து வருகிறது. ஆனால், த.வெ.க. அரசு இந்தத் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு, எதிர்ப்புக் குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தப்போராட்டங்களுக்கு இடையே, தமிழ்நாடு வந்து சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துக் காஃபி குடித்து சென்று இருக்கிறார். த.வெ.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கிறது.
ஆனால், SIR மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் விஜய் பெயர் இடம் பெறாதது பெருத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
"பாசிசம், பாயாசம்" என விஜய் வசனம் மட்டும்தான் பேசுவார்; தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்பட மாட்டார் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் விஜய் பெயர் எங்கே என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு? சாதாரணமாக பேசும் போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தரேன் சாப்பிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்… அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல… பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?
காங்கிரஸ் உள்ளிட்ட துரோகிகள் கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் கழகத்தின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கியில்லாத டம்மிபீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரட்' டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ? என கேள்வி எழுப்பியுள்ளார்.






