தமிழ்நாடு

“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் உள்ள முரண்பாடுகளை களைவது தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை தி.மு..க குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

“உரிய முறையில்  சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

OBC பிரிவினர் தங்களது சாதியை உரிய முறையில் பதிவு செய்யும் வகையில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை தி.மு.க குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ​சமூக நீதியை முன்னெடுத்துச் செல்வதற்கான அத்தியாவசியக் கருவியாக, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதை குறிப்பிட்டுள்ளார். 1921 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ நடவடிக்கைகள் முதல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் தலைமையில் திராவிட இயக்கம் மேற்கொண்ட நூற்றாண்டு கால போராட்டம் வரை தமிழ்நாடே இதில் முன்னோடியாகத் திகழ்வதாகவும், இதன் காரணமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு உறுதி செய்து பெற்றுள்ளதையும் தனது கடிதத்தில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை பதிவு செய்வதற்கு உரிய பட்டியல் தரப்படவில்லை, தற்போது நடத்த உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு முறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

OBC பட்டியல்களில் உள்ளவை வகுப்புகள் என்றும் சாதிகள் அல்ல என்று கூறப்படும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

1931 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 4,147 சாதிகள் பதிவு செய்யப்பட்டதற்கு மாறாக, 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிப் பெயர்கள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, சாதிப் பெயர்கள், உள்சாதிகள் மற்றும் உட்பிரிவுகளில் உள்ள மாறுபாடுகள், சீரற்ற மற்றும் நம்பகத்தன்மையற்ற தரவுகளுக்கு வழிவகுக்கும். இது சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம், OBC சமூகங்களின் உண்மையான மக்கள் தொகை மற்றும் சமூக-பொருளாதார, கல்வி நிலையை உறுதிப்படுத்துவதாகும். இதன் மூலம் அரசாங்கங்கள் பொருத்தமான இடஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களை வகுக்க முடியும். எனவே, சேகரிக்கப்படும் தரவுகள் துல்லியமானதாகவும், தரப்படுத்தப்பட்டதாகவும், பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பது கட்டாயமாகும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, மாநிலப் பட்டியல், ஒன்றிய அரசுப் பட்டியல் ஆகியவற்றிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல்களின் அடிப்படையில் சாதி விவரங்களைப் பெற்றுத் தொகுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான பட்டியலிலிருந்து மக்கள் சாதியை அடையாளம் கண்டு தெரிவிக்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு இருக்க வேண்டும் என்றும் இதனைக் கருத்தில் கொண்டு, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான வழிமுறைகளை உரிய முறையில் திருத்தியமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் பராமரிக்கப்படும் சாதிப் பட்டியல்களின் அடிப்படையிலான சாதிவாரி கணக்கெடுப்பு, முரண்பாடுகளைத் தவிர்க்க உதவும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை தி.மு.க குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories