
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு மானியக் கோரிக்கை மீதான விவாதம் செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கொலை, கொள்ளைச் சம்பவங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
இந்த விவாதத்திற்கு உடனே பதிலளிக்காமல், 3 நாட்கள் கழித்துப் பதிலளிப்பதாக முதலமைச்சர் விஜய் கூறிவிட்டு அவையிலிருந்து வெளியேறினார்.இதையடுத்து நேற்று மூன்று நாட்கள் கழித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்று பார்த்தால், வழக்கம் போல் சினிமா பாணியில் கத்திக் கத்திப் பேசி உரிய பதில்களை அளிக்காமல் தி.மு.க மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், மிசாவில் சிறைசென்ற முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்துத் தேவையில்லாமல் செய்கை ஒன்றைக் காட்டியது, நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.இதற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செயலுக்குத் த.வெ.க அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ள இடதுசாரிகள் உட்படப் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவையில், ”சர்க்காரியா கமிஷன், நீதிமன்றத்தில் உள்ள அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா, முரசொலி மாறன் ஆகியவை குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தி முதலமைச்சர் விஜய் பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” எனத் தி.மு.க எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு, கொறடா எ.வ.வேலு, கோவி.செழியன் ஆகியோர் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய தி.மு.க கொறடா எ.வ.வேலு ”நீதிமன்ற விசாரணையில் அல்லது நிலுவையில் உள்ள ஒரு வழக்கின் ஆவணங்களையோ, அது தொடர்பான விவகாரங்களையோ சட்டப்பேரவையில் வாசிப்பதோ அல்லது விவாதிப்பதோ சட்டமன்ற விதிகளின்படி அனுமதிக்கப்படுவதில்லை.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், வழக்கின் விசாரணையில் சட்டப்பேரவையின் தலையீடு அல்லது தாக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகவும் இந்த மரபு மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. எனவே, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள ED ஆவணங்களை அவையில் பயன்படுத்துவது விதிகளுக்குப் புறம்பானதாகும்.
அவையில் தங்களுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க வாய்ப்பில்லாத, மறைந்த முன்னாள் தலைவர் முரசொலி மாறன் குறித்து தனிப்பட்ட முறையிலோ அல்லது ஆதாரமற்ற வகையிலோ அவதூறுகளை முன்வைப்பது சட்டமன்ற மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது.
வரலாற்றுப் பதிவுகளின்படி, சர்க்காரியா கமிஷன் ஆராய்ந்த 28 குற்றச்சாட்டுகளும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றும், அதன் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றும் கமிஷன் தெரிவித்துள்ளது. எனவே, முழுமையாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளைப் பற்றி அவையில் பேசுவது அவையின் மரபை மீறுவதாகும்.
சட்டமன்ற விதிமுறைகளின்படி, ஆதாரமற்ற தனிப்பட்ட குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் மற்றும் அவையின் மரபை மீறி முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகள் அவை குறிப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
பிறகு பேசிய கோவி.செழியன் ”அமலாக்கத்துறை அரசின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை ஆதாரங்களாக எப்படி முதலமைச்சர் காட்ட முடியும்? சர்க்காரியா ஆணையத்தில் குற்றவாளிகள் யார் என்று குறிப்பிடாத நிலையில், மீண்டும் மீண்டும் தி.மு.க மீது குற்றம்சாட்டுவது அரசியல் ஆதாயம் இல்லையா? சட்டப்பேரவையில் மறைந்த முரசொலி மாறன் குறித்துப் பேச என்ன உள்ளது?" என கேள்வி எழுப்பினார்.






