
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே NGO நகர் பகுதியில் சுகிர்தா லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதில் சாய் மோதிஷ் என்ற மகன் இருக்கிறார். இந்த சிறுவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த 26ஆம் தேதி அரசு விடுமுறையையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சாய் மோதிஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மைதானத்தில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சிறுவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே சிறுவன் மயங்கி விழுந்தார்.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று (ஆக.29) மதியம் சுமார் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், காஞ்சி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், கிரிக்கெட் பந்து தலையில் பலமாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






