
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை குறைத்துள்ளது தவெக அரசு. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் காண தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் தினமும் வருகை தரும் நிலையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசே பாதுகாப்பை விலக்கிக் கொண்டுள்ளது பல்வேறு விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, SDPI கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் தலைவராகவும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் மக்கள் பணியில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். பொதுவெளியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கும் இத்தகைய மக்கள் தலைவர்களின் பாதுகாப்பு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்டது.
சமகால அரசியல் சூழலில் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில், திடீரென பாதுகாப்பைக் குறைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதோ என்ற நியாயமான சந்தேகத்தை எழச் செய்கிறது.
மக்கள் தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோ, உள்நோக்கங்களோ துளியும் தலைதூக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் மக்கள் தொடர்பையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அதே முழுமையான 'Z+' பாதுகாப்பைத் தாமதமின்றி மீண்டும் வழங்கிட வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு குறைப்பு பற்றி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி, முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொடுத்து வந்த உயர் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு முதலமைச்சர் விஜய் குறைத்தது ஆச்சரியம் அளிக்கிறது.
இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது காழ்ப்புணர்ச்சி அரசியலின் வெளிப்பாடாகவே கருதப்படும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு முன்னாள் முதலமைச்சர், முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பை குறைப்பது என்பது சாதாரண நிர்வாக நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்பட முடியாது.
பாதுகாப்பு என்பது அரசியல் விருப்பு–வெறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக் கூடாது. ஒருவரின் அரசியல் நிலைப்பாடு அல்லது அவர் வகிக்கும் அரசியல் பாத்திரத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் செய்வது ஜனநாயக மரபுகளுக்கு உகந்ததல்ல.
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த முறையான மதிப்பீட்டின் அடிப்படையில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு அறிவியல் ரீதியான அச்சுறுத்தல் மதிப்பீடு எதுவும் இல்லாமல் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருந்தால், அது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.
குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு தொடர்பான முடிவில் அரசியல் தலையீட்டுக்கு எந்தவித இடமும் இருக்கக்கூடாது.
மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கான காரணங்களை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக மக்களுக்கு விளக்க வேண்டும். பாதுகாப்பு குறைப்பு அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டதா? அதற்கான உளவுத்துறை மதிப்பீடு என்ன? பாதுகாப்பு குறைப்பு தொடர்பாக எந்த அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும்.
அரசியல் எதிரிகளை எதிர்கொள்வது என்பது ஜனநாயகத்தில் அரசியல் விவாதத்தின் மூலமாக இருக்க வேண்டும்; அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக இருக்கக்கூடாது.
எனவே, மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது தொடர்பான முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவருக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்த விவகாரத்தில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பதை அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு அரசியல் தலைவரின் பாதுகாப்பு என்பது அவரது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல; அது ஜனநாயகத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சகிப்புத்தன்மையுடன் தொடர்புடைய பொதுப்பிரச்சினையாகும் என தெரிவித்துள்ளார்.








