தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் உரிமை பிரச்சினையை வலியுறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது விஜயின் உருவப் பொம்மைகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில், உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும், காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பிறகு விடுவிக்கப்படுவார் என்றும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணையை முடித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ, "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும், அவரைக் கைது செய்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டோம்.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி தஞ்சாவூர் காவல்துறையினர் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையின்போது காவல்துறையின் அப்பட்டமான அடக்குமுறையையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

நாளை தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் பங்கேற்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் காவல்துறையினர் தெரிந்தே மீறியுள்ளனர். மீண்டும் ஒருமுறை, சட்டத்தின் மூலம் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories