தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் - “லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இதெல்லாம் புரியாது” : ரகுபதி பதிலடி!

அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பொய்யான குற்றச்சாட்டிற்கு திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் - “லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இதெல்லாம் புரியாது” : ரகுபதி  பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேகதாது அணை கட்ட திமுக அரசு ஒரு அங்குலம் கூட அனுமதித்தது கிடையாது. லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இதெல்லாம் புரியாது.

உச்ச நீதிமன்ற வழக்கு பற்றி கற்றறிந்த வழக்கறிஞரிடம் ஆதவ் அர்ஜூனா கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ரகுபதி "தமிழ்நாட்டிற்குச் சேரவேண்டிய காவிரி நீரைப் போராடிப் பெறுவதிலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது.

தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேற்றைய தினம் திமுக அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து உண்மைக்கு மாறான பல கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு வழக்குகளை சிறப்பாக நடத்தி வெற்றிபெற்ற அரசு திமுக அரசு. ஆனால், மேகதாது விவகாரத்தில் திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கைச் சரியாகக் கையாளவில்லை என ஆதவ் அர்ஜுனா தவறாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் ஒரு கற்றறிந்த வழக்கறிஞரிடம் சென்று என்ன கூறியுள்ளார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைச்சர் இவ்வாறு பொய்யான தகவலை தெரிவிக்க கூடாது.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க அனுமதி கேட்கிறது அப்போது, தமிழ்நாடு அரசின் எதிர்ப்புகள் இன்றி தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் வழங்குகிறது. அந்த உத்தரவை எதிர்த்துதான் திமுக ஆட்சியில் நாம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றோம். மேகதாது அணை திட்டமே கூடாது என்பதுதான் நமது முதன்மை நிலைப்பாடாக இருக்கும் போது இந்த உத்தரவே தவறு என கூறி உச்ச நீதிமன்றம் சென்றோம்.

அந்த வழக்கில் மேகதாது அணையே கூடாது என்பது தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு அப்படி இருக்கையில் தமிழ்நாட்டின் எதிர்ப்பின்றி DPR தயாரிக்க வேண்டும் என்பது தவறானது என்கிறோம். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. 'இன்னும் அணைக்கான அடிப்படை வேலைகளே தொடங்கப்படாததால், இது ஒரு தொடக்க கட்டம் (Premature Stage)' என்றே கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது. குழந்தையே பிறக்காத போது பெயர் வைப்பதைப் போன்ற சூழல்தான் இது. ஆனால் ஆதவ் அர்ஜூனாவிற்கு இதெல்லாம் புரியாது புரிய வாய்ப்பு கிடையாது. ஏன் என்றால் அவர்கள் லாட்டரியில் கவனம் செலுத்துபவர்கள் இப்போது புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் ஆகவே தன் அவர் அவ்வாறு தவறான தகவலை கூறி உள்ளார். மேகதாது அணை கட்ட கூடாது அதற்காக சட்டமன்றத்திலே எங்களது எதிர்க்கட்சி தலைவர் ஒரு திருத்தம் கொண்டு வந்து அதில் ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் புதிய நடுவர் மன்றம் அமைத்து அதில் மேகதாது பிரகச்சனையை தீர்க்க வேண்டும் என்றோம்.

"மேகதாது அணையைக் கட்டுவதற்கு திமுக அரசு ஒரு சொட்டு கூட, ஒரு படி கூட, ஒரு அங்குலம் கூட அனுமதித்தது கிடையாது. காவிரி டெல்டா விவசாயிகளைக் காப்பதில் திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிகர் எவருமில்லை. ஆனால் இப்போது முதல்வர் கர்நாடகா செல்ல இருப்பதாக கூறுகிறார்கள் அதற்காக ஏதாவது சாக்கு போக்கு காரணத்தை கூற வேண்டும் என திமுக மீது வீண் அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் இன்றைய அரசு கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முயற்சிப்பது பயனற்றது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த முடிவும் வந்ததில்லை; அது வெறும் 'ரீல்ஸ்' எடுக்க மட்டுமே உதவும். பேச்சுவார்த்தை என்பது விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்து, காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க உடனே ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தபோது மேகதாது விவகாரத்திற்காகத் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி கடிதம் கொடுத்தாரா அல்லது நேரில் வலியுறுத்தினாரா என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. மக்கள் நலனிலும் டெல்டா விவசாயிகள் நலனிலும் பட்டும் படாமல் இருக்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளின் மொத்த உருவம்தான் தமிழக வெற்றிக் கழகம். வழக்கறிஞர் உமாபதி குறித்து சட்டமன்றத்தில் நல்லவிதமாக பேசிய ஆதவ் அர்ஜூனா அவர்கள் இப்போது மாற்றி பேசுகிறார். முன்பொரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு என முரண்படுகிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை கடந்த 2-3 மாதங்களாகத் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி தண்ணீர் வரவில்லை. டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். எனவே சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி காவிரி நீரைப் பெற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை"” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories