
பழனிகோவில் பத்திரப்பதிவு விவகாரத்தில் தெரியாமல் பத்திரப்பதிவு நடைபெற வாய்ப்பே இல்லை. அறநிலையத்துறை இடத்தை பதிவு செய்ய முடியாது என பத்திரப்பதிவு அலுவலக ஆவணங்களில் இருக்கும்போதே எப்படி பதிவு செய்தனர்? தி.மு.க மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில், முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பி.மூர்த்தி "பழநி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து நில மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கெல்லாம் உடந்தை இருக்கிறது என்பது குறித்து தற்போது பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த மோசடிக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருவதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக, கோயில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வக்ஃபு வாரிய இடங்களைப் பத்திரப்பதிவு செய்ய முடியாது எனப் பதிவுத்துறை அலுவலக ஆவணங்களிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்போது, இத்தகைய நிலங்களைப் பதிவு செய்யவே முடியாது.அதேபோல், கோயில் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்வதற்கு முந்தைய நாளே 'டோக்கன்' பெறப்பட்டிருக்கும்.
எனவே, பழநி கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விஷயம், யாருக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இந்த விவகாரம் குறித்துப் தற்போதைய அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாகப் பதில் அளிக்காமல், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பதிவுத்துறையில் முறைகேடுகள் நடந்துள்ளன எனக் குற்றம் சாட்டுகிறார்.
கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில், 'யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யலாம்' என்று யாரும், யாருக்கும் சொல்லவில்லை. ஆங்காங்கே சில தவறுகள் நடந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடுகள் குறித்து எப்போது புகார்கள் வந்திருந்தாலும், அப்போதே அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 589 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் எனது ஆட்களை நானே நியமித்ததாக அமைச்சர் கூறுகிறார். பொறுப்பான பதவியில் இருக்கும் ஓர் அமைச்சர், இதுபோன்று ஆதாரமற்ற பொதுவான குற்றச்சாட்டுகளைப் பேசக் கூடாது.
சட்டத்துறையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறப்படுவதாக தற்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஞானசுந்தரி என்பவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார், தினந்தோறும் செய்தியாளர்களைச் சந்திப்பதையே தனது முழுநேர வேலையாக வைத்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் அவரே முன்னின்று பதிலளித்து, ஒரு நிழல் முதலமைச்சரைப் போலச் செயல்பட்டு வருகிறார். பொதுவாக, அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களை எக்காரணம் கொண்டும் பத்திரப்பதிவு செய்ய முடியாது. அப்படியிருக்க, பழநி கோயில் நிலத்தை எப்படிப் பதிவு செய்தார்கள்? குறிப்பாக, இதற்காகவே ஒரு சார்பதிவாளரைத் திட்டமிட்டு இடமாற்றம் செய்து, இந்த முறைகேடான பதிவை நடத்தியுள்ளனர்.
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பொதுவாகச் சொல்லாமல், தகுந்த ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் என்று நான் சவால் விடுகிறேன்.ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்று தற்போதைய ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால், சமீபத்தில் 60 பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.37 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல், நகராட்சி அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது?அமைச்சர் நிர்மல்குமார் தனது கட்டுப்பாட்டில் உள்ள இரு துறைகளின் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும்.
தற்போது மின்கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், அவர் அதைப்பற்றிப் பேசாமல், கூட்டணி விவகாரம் தொடங்கி அனைத்துத் துறைகள் குறித்தும் அகில இந்திய அளவில் பேசி, ஒட்டுமொத்தப் பிரச்சினையையும் திசைதிருப்பப் பார்க்கிறார்.கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் ஏதேனும் தவறுகள் நடந்தால், மேலதிகாரிகளே உடனுக்குடன் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்துவிடுவார்கள். ஏனெனில், எல்லா ஆட்சிக் காலத்திலும் ஒரே அதிகாரிகள்தான் பணியில் நீடிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 589 பத்திரப்பதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது? என் மூலமாகத்தான் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது என்பதற்கான தகுந்த ஆதாரங்களை அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாக வெளியிட வேண்டும். நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்புகளை அமைச்சரோ அல்லது அரசியல்வாதிகளோ தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க முடியாது; தகுந்த உயர் அதிகாரிகள் மட்டுமே அதை ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள். பொதுமக்களின் நில மதிப்பீடு பதிவு செய்யப்படும்போது, எந்த வழிகாட்டு மதிப்பு கூடுதலாக இருக்கிறதோ, அதனடிப்படையில்தான் பத்திரப்பதிவு கட்டணம் வசூலிக்கப்படும்.
வணிகவரித்துறையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதித்துறைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் பதவியில் இருக்கும்போதுதான் துறையின் வருவாயைப் பெருக்குவதற்கான சிறப்பான திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதை நினைவூட்டுகிறேன். கடந்த 2021-ஆம் ஆண்டில் பத்திரப்பதிவுத்துறையின் வருவாய் 10,000 கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், எங்களது தொடர் முயற்சியால் 2026 மார்ச் மாத நிலவரப்படி, இந்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாக உயர்ந்து, தற்போது 25,000 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், வணிகவரித்துறையிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். அதன் விளைவாக, 2021-இல் 96,000 கோடியாக இருந்த வணிகவரித்துறை வருவாய், 2026-இல் 1,43,000 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக நான் பொறுப்புவகித்த இந்த இரண்டு துறைகளின் மூலமாக மட்டும் தமிழக அரசுக்கு 1,68,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.






