தமிழ்நாடு

"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடக்கவில்லை.

"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க ஆட்சியில் நடந்து வரும் குதிரை பேரம், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை வரம்பு மீறிக் காவல் துறை மூலம் மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கக் கோரி, தி.மு.க சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைப்புத் துணைச் செயலாளர் ஆஸ்டின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் சென்னை கிண்டி ராஜ் பவனில் ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்துப் புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி "த.வெ.க அரசு செய்து வரும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடம் நேரடியாக விளக்கம் கொடுத்தோம். இந்த மாதம் 1-ஆம் தேதி, அரசுக்குத் தொடர்பு இல்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அமைச்சர்களை விட அதிகாரம் பெற்றவர்களாக எல்லா விவகாரங்களிலும், உயர்மட்டக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு, முதலமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் கேவலமான நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே கடந்த 1-ஆம் தேதி ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம்.

‌இன்றைக்கு ஆளுநரைச் சந்தித்து நாங்கள் சொன்னதை ஆளுநர் கூர்ந்து கேட்டுக்கொண்டார். 'அந்த இரண்டு பேரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள என்ன அதிகாரம் இருக்கிறது?' என்று ஆளுநர் கேட்ட அந்த வார்த்தை எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன், 'அவர்கள் இருவரும் கண்டிப்பாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களை அமைச்சர்கள் ஆக்கியிருக்கலாமே!' என்று அவராகவே கூறினார். இது குறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

இந்த ஆட்சி நடைபெறுவது தவறானது என்பதை ஆளுநரே ஒப்புக்கொள்ளும் வகையில் அவரது பேச்சு இருந்தது.குதிரை பேரத்தின் உச்சமாக நேற்று தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இதுவரை அவதூறு வழக்கில் யாரையும் கைது செய்வது கிடையாது.

கடந்த கால ஆட்சியில் என் மீது 16 வழக்குகளும், தளபதி மீது 40 வழக்குகளும் இருந்தன. ஆனால், நாங்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால் நேற்று அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்து 5 மணி நேரம் காவல் துறையினர் அவரைத் துன்புறுத்தியுள்ளனர்.அத்துடன், 'உங்களுக்கு ஏன் சார் இந்த வீண் கஷ்டம்? த.வெ.க-வுக்கு வந்து சேர்ந்துவிடுங்கள்' என்று த.வெ.க-வில் சேர அனிதா ராதாகிருஷ்ணனை அவர்கள் வற்புறுத்தியுள்ளார்கள்.

தி.மு.க அமைப்புத் துணைச் செயலாளர் ஆஸ்டினையும் த.வெ.க-வில் இணையச் சொன்னதாகவும், 'அவரை ராஜினாமா செய்யச் சொல்லி, நீங்கள் என்ன இலாகா கேட்கிறீர்களோ அதைக் கொடுக்கிறோம்' என்று சலுகை கொடுத்தார்களா இல்லையா என்பதை அவர்கள் நாணயமாக மறுக்க வேண்டும். அப்படி மறுத்தால் நான் அதை ஆதாரத்தோடு நிரூபிப்பேன்" என்று கூறினார்.

அத்துடன், வேப்பனஹள்ளி தி.மு.க எம்.எல்.ஏ சீனிவாசனையும் த.வெ.க-வில் இணைய அவர்கள் வற்புறுத்தி, 50 கோடி ரூபாயும் எந்த வாரியம் கேட்டாலும் அதைக் கொடுப்பதாகவும் வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டிய ஆர்.எஸ். பாரதி, அதையும் புகாராக ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

அத்துடன், த.வெ.க-வில் சேர்ந்த விஜயபாஸ்கர், ஓ.எஸ். மணியனிடம் பேசி, 'த.வெ.க-வுக்கு வந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும்' என்று சொன்னதாகவும் தகவல் வந்தது. எனவே, ஆள் பிடிப்பதற்காகவே இந்த ஆட்சி நடக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று ஆளுநரிடம் நாங்கள் தெரிவித்தோம். அவரும் அதைக் கேட்டுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

முதலமைச்சர் வரும்போது காவல் துறையின் புரோட்டோகால் இருக்கிறது. ஆனால், விஜய் வரும்போது அவருடைய தனிப்பட்ட செயலாளர் தான் எல்லா நிகழ்ச்சிக்கும் வருகிறார்; காவல் துறையைக் கூட நெருங்க விடுவதில்லை. இது அத்துமீறல், சினிமா காட்சி போல இருக்கிறது.ஆளுநர் பதவி வேண்டாம் என்று சொன்னது தி.மு.க-தான். 'ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்குக் கவர்னரும் தேவையில்லை' என்று அண்ணா சொன்ன அந்த வார்த்தை மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.‌

மதுரையில் ஆளுநர் ஆய்வு செய்ததை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எதிர்த்தது வேறு. ஆனால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் செல்லும் முன் சில விதிமுறைகள் இருக்கின்றன; அதன்படி ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories