
தவெக ஆட்சியமைப்பதற்கு முன்பு தான் பேசிய ஒவ்வொரு மேடைகளிலும், ஏன் அண்மையில் சட்டப்பேரவையில் கூட ஊழலை ஒழிப்பேன் என்றும், லஞ்சம் யாரும் பெறக்கூடாது என்றும் வாய்க்கிழிய பேசினார். ஆனால் தங்கள் கட்சியில் பதவி வழங்குவதற்கே பல லட்சம் லஞ்சம் பெறுவதாக பாதிக்கப்பட்ட பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் தூய சக்தி விஜய்.
இப்படியான சூழலில் ரூ.5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் எம்.ஞானசௌந்தரி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி இணை செயலாளராக இருந்து வருகிறார். இந்த சூழலில் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து எம்.ஞானசௌந்தரி தாக்கல் செய்துள்ள மனுவில்...
"அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு ஜூன் 5ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், பட்டியல் இனத்தை சேர்ந்த, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நான், தவெக மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ் அறிவுறுத்தலின்படி மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
ஆனால் விண்ணப்பம் செய்வதற்கான கெடு ஜூன் 29ஆம் தேதி மாலை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகலிலேயே நியமன பட்டியல் என்று வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் விசாரித்தபோது அதுதான் இறுதி பட்டியல் என்று கூறியதால் நான் அதிர்ச்சியடைந்தேன்.
மேலும் ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ,30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களே, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகின்றனர். தவெக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூட்டுசேர்ந்தும், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலும், இந்த நியமனங்கள் நடந்துள்ளது.

மேலும் எனது கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில், சட்டத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறது.
எனவே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடவும், அதுவரை அறிவிப்பாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கொள்கிறேன்." " என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்து பேசும் விஜய், தனது கட்சிக்குள் இருக்கும் ஊழலை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.






