
கடந்த மாதம், அரசு கேபிளிலில் புதியதலைமுறை தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்ததுடன் ஒளிபரப்பை உடனே தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து நீக்கப்பட்ட புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அரசு கேபிள் நிறுவனத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (05.06.26) பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த தொலைக்காட்சிகளின் சார்பாக அரசு தரப்பில் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாளும், ஒளிபரப்பு தொடங்கப்படாததால் மீண்டும் அரசு தரப்பில் கேட்டபோது, அரசு கேபிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு, அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காததால் , அந்த நிறுவனம் சில தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைகாட்சியின் நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்தபோது, அதிகாரிகள் கூறிய காரணம் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் மீண்டும் தொடர்புகொண்டு பேசியபோது உரிய முறையில் பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை குறித்து செய்தி தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, இதுபோன்ற செய்திகளை வெளியிட்டதன் காரணமாக அரசு கேபிளில் தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கூட கழியாத நிலையில், மக்களுக்கு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்துவரும் தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பாலிமர், நியூஸ் தமிழ் 24x7 மற்றும் ஜனம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் செய்தி தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்யும் இதுபோன்ற நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் பத்திரிகையாளர்களை திரட்டி மிகப்பெரிய பேராட்டம் நடத்தப்படும் என்றும் சென்னை பத்தரிகையாளர் மன்றம் எச்சரிக்கிறது.






