
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து, கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், போதைப்பொருட்களின் புழக்கமும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய த.வெ.க அரசோ வேடிக்கை பார்த்து வருகிறது.
அதோடு, இந்தக் குற்றச்சம்பவங்களுக்கெல்லாம் முந்தைய தி.மு.க அரசுதான் காரணம் என முதலமைச்சரே தனது பொறுப்பை மறந்து பேசி வருகிறார்.தற்போது அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை குறித்துக் கேள்வி கேட்ட செய்தியாளரை மிரட்டும் தொனியில் ஏகவசனத்தில் பேசியுள்ளார்.
இத்தகைய ஆணவப் போக்கிற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஊடக அமைப்புகளும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில், த.வெ.க அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வன்மையாகக் கண்டிக்கிறது.
தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சமூகவலைதள பக்கத்தில், ”தமிழ்நாட்டில சட்டம் ஒழுங்கு சரி இல்லையேன்னு ஒரு நிருபர் நியாயமான கேள்வி கேட்டா, அதுக்கு முறையான பதில் சொல்ல அமைச்சருக்கு துப்பில்லை. அதை விட்டுட்டு, "உன் வீட்டுல என்ன ஆச்சு? உன் குழந்தைக்கு என்ன ஆச்சு?"-ன்னு ஒரு நிருபரை மிரட்டுற தோரணையில் பேசுறது எந்த விதத்துல நியாயம் அமைச்சரே?
ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியாதா? இல்லை தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்குறீங்களா?
தினம் தினம் பாலியல் குற்றங்கள், பட்டப்பகல்ல நடக்குற கொலைகள்,தொடர் கொள்ளை சம்பவங்கள் இப்படி வரிசையா அடுக்கிக்கிட்டே போலாம். இதையெல்லாம் தடுத்து நிறுத்த வக்கு இல்லாத நீங்க, கேள்வி கேட்டா மட்டும் எகத்தாளமா பேசுறீங்களா?
மக்களோட பாதுகாப்புக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்துல உட்கார்ந்துட்டு, இப்படி திமிரா பேசுறதை இதோட நிறுத்திக்கோங்க. நீங்க பேசுற ஒவ்வொரு பேச்சும் அதிகாரத் திமிர்ல வர்றதுன்னு மக்களுக்கு நல்லாவே புரியுது. குற்றங்களை தடுக்க வழியப் பாருங்க, அதை விட்டுட்டு கேள்வி கேக்குறவங்களை மிரட்டி வாயை அடைக்கப் பார்க்காதீங்க! முழு பூசணிக்காயைச் சோத்துல மறைக்க ட்ரை பண்ணாதீங்க செங்கோட்டையன்.” என கண்டனம் தெரிவித்துள்ளது.






