தமிழ்நாடு

விஜய் ப்ரோ இதுதான் உங்கள் வீரமா? : கடுமையாக சாடிய ஆ.ராசா எம்.பி!

விஜய் Bro, பிரதமர் மோடிக்கு முன்னால் உங்கள் சக்தி எங்கே போனது? என ஆ.ராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் ப்ரோ இதுதான் உங்கள் வீரமா? : கடுமையாக சாடிய ஆ.ராசா எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (02-06-2026) திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா,எம்.பி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்த செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்று 234 தொகுதிகளில் 107 இடங்களில் வெற்றி பெற்று, அந்த எண்ணிக்கையோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றது. முதலமைச்சராக மாண்புமிகு விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது போதுமான வாக்குகளைப் பெறுகிற அளவிற்கு எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு ஒத்துழைத்து அவர் முதலமைச்சராகப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அமைக்கப்பட்டிருக்கின்ற புதிய ஆட்சிக்கு வாழ்த்துகளைச் சொன்னதோடு "ஆறு மாத காலத்திற்கு உங்களுடைய ஆட்சியினுடைய திறனைக் கடுமையாக விமர்சிக்க மாட்டோம்" என்று கூறி இந்த அரசாங்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விழைந்தார்கள்.

அதற்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் டெல்லிக்குச் சென்றார்; பிரதமரைப் பார்த்தார். ஏனைய மூன்று மாநில (அசாம், மேற்கு வங்காளம், கேரளா) முதலமைச்சர்களைப் பிரதமர் ஏறத்தாழ 40 முதல் 50 நிமிடங்கள் சந்தித்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ தமிழ்நாட்டினுடைய முதலமைச்சருக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பிரதமரால் ஒதுக்கப்பட்டு, உடனடியாக நிர்மலா சீதாராமனைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் அவர் திரும்பி இருக்கிறார்.

அதற்குப் பிறகு முதன்முதலாகத் தமிழ்நாட்டினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகத் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்குத் திருச்சிக்குச் சென்றவர் ஒரு 18 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள ஒரு பதவியில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்ற ஒருவர் அரசியல் சட்டம் என்ன ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறதோ அதாவது Constitutional Morality -ஐ பின்பற்ற வேண்டும்.

இன்னும் நான் தெளிவாகச் சொல்வதென்றால், அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் அவர்கள் பேசுகின்றபோது:

"அரசியல் சட்டம் இருக்கிற எல்லா நாடுகளுக்கும் அரசியல் ஒழுக்கம் என்று ஒன்று தேவையில்லாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு Constitutional Morality தேவைப்படுகிறது. அது முதலமைச்சர்களுக்கும், அமைச்சர்களுக்கும், பிரதமர்களுக்கும் பொருந்தும்" என்று உரையாற்றியிருக்கிறார்.

அந்த Constitutional Morality, Accountability எதுவுமே இல்லாமல், தான் வகிக்கிற பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன்னுடைய தகுதியைக் குறைத்துக்கொண்டு பிதற்றியிருக்கிறார்; வீராவசனம் பேசியிருக்கிறார்.

நான் தமிழ்நாட்டு மக்களை, அவருக்கு வாக்களித்த பெருமக்களை, வாக்களிக்காத பெருமக்களை வாக்களிக்காவிட்டாலும் எனக்கும் சேர்த்து அவர்தான் முதலமைச்சர் என்கின்ற அந்த உணர்வோடு, மிகுந்த மரியாதையோடு கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்: சட்டமன்றத்தில் பதிலுரை ஆற்றிய மாண்புமிகு விஜய் அவர்களுடைய Tone and tenor, அவருடைய குரலினுடைய வலிமை, அந்த அழுத்தம், அந்தச் சத்தம்... அதையும், திருச்சியில் அவர் உரையாற்றுகிறபோது எள்ளலும் துள்ளலுமாக, கர்ஜித்ததாகச் சொல்லிக்கொண்டு கத்திக்கொண்டு பேசினாரே அந்தப் பேச்சையும், இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏன் சட்டமன்றத்திற்குள்ளே தளர்வு, சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை? ஆனால் திருச்சியில் ஏன் இந்த வீரவசனம்? அந்த வசனத்தை எழுதிக் கொடுத்தது யார்? என்கின்ற பொருத்தப்பாட்டை, ஒப்பீட்டை நீங்கள் எண்ணிப்பார்த்தால், இதற்குப் பின்னாலே இருக்கின்ற அரசியல் தந்திரம், அரசியல் அசிங்கம், புலம்பல் எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

அவர் சொல்லுகிறார், ஒவ்வொரு வரிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குறை சொல்வதாக நினைத்துக் கொண்டு "Stalin சார்" என்பது... அப்புறம் "திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி, மத்தவங்க எல்லாம் அள்ளு சில்லு" என்கிறார். மத்தவங்க எல்லாம் அள்ளு சில்லுன்னா யார்? அதிமுக மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களா?

"உங்களுக்கும் எனக்கும் தான் போட்டி, மத்தவங்க எல்லாம் அள்ளு சில்லு" என்றீர்களே முதலமைச்சர் அவர்களே, உங்களுக்கு ரொம்ப சங்கடமாக இல்லையா? நான் வேறு வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை. அந்த அள்ளு சில்லு வீட்டுக்கே நீங்களே போய், சால்வை போட்டு, அவர்களோடு சேர்ந்து ஓட்டு வாங்கினீர்களே... அந்த அள்ளு சில்லுகிட்ட போய் கெஞ்சிக் கூத்தாடியது தில்லுமுல்லு அரசியலா, அநாகரிக அரசியலா? அதைத் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?

நான் இப்போதும் சொல்கிறேன், இந்த ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, ஒரு முதலமைச்சருக்குத் தர வேண்டிய மரியாதையை எங்களுடைய தலைவரும் நாங்களும் தரத் தயார். ஆனால் எங்களுடைய நிலைப்பாடு உணர்ச்சிவசப்பட்டவர்கள் இந்த ஆட்சியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அதே வழியில் முதலமைச்சரும் செல்லக் கூடாது என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொன்றுக்கும் அரசியல் புரிதல் இல்லாமல் "கவர்ச்சி அரசியல்" என்கிறார்கள். வாதத்திற்கு வைத்துக்கொள்வோம், ஏன் சினிமா நடிகருக்குக் கவர்ச்சி அரசியல் இருக்கக் கூடாது? "அந்தக் கவர்ச்சி அரசியலில் இருந்து வெளியே வாருங்கள்" என்று தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்வதற்கு மற்ற கட்சிகளுக்கு எல்லாம் உரிமை இல்லையா? அது என்ன "கவர்ச்சி அரசியல்" என்று வார்த்தையைப் பயன்படுத்தினால் எனக்கு நன்றாக வந்துவிடும்... என்ன வார்த்தை வந்துவிடும்? இது முதலமைச்சருக்கு அழகா?

"You are occupying the constitutional chair, brother / bro Vijay" என்று நாங்களும் கேட்போம்.

ஒரு முதலமைச்சராகப் போகிறீர்கள், நன்றி சொல்கிறீர்கள். திமுகவை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, விமர்சியுங்கள். அதற்கு ஒரு ஐந்து நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள். மீதி 10 நிமிடங்கள், "பிரதமரோடு போனேன், சந்தித்தேன், என்ன செய்யப் போகிறேன், பிரதமரிடம் மனு அளித்திருக்கிறேன்" என்று ஏதாவது சொல்லியிருக்கிறீர்களா?

நான் கேட்கிறேன், யாரைப் பார்த்து நீங்கள் குறை சொல்கிறீர்கள்? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நீங்கள் போய் கடிதம் கொடுக்கிறீர்கள். நீங்கள் சொன்ன "Stalin சார்" யார் தெரியுமா? அரசியல் சட்டத்தால் திருத்தப்பட்ட EWS (Economically Weaker Sections) constitutional mandate, once it was passed by the Parliament, அதைத் தமிழ்நாட்டுக்குள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் ஸ்டாலின்! நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் போட்டிருப்பது என்ன தெரியுமா? வெறும் அரசாணை (G.O.) சார். அரசியல் சட்டத்தை மீறினால் ஆட்சியையே கலைக்கலாம். நாங்கள் மீறியிருக்கிறோம், தாழ்த்தப்பட்டவர்களுக்காக, பிற்படுத்தப்பட்டவர்களுக்காக! நீங்கள் ஒரு தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் போய் கெஞ்சுகிறீர்களே, கூத்தாடுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன? இந்த வீரத்தை நாங்கள் அம்பலப்படுத்தக் கூடாதா?

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, "நாங்கள் உங்களுடைய governance-ஐத் தான் ஆறு மாதம் கழித்து விமர்சிப்போம்" என்று சொன்னோம். "உங்களுடைய இயலாமையை, day-to-day administration-இல் இருக்கிற குறைபாடுகளை நாங்கள் விமர்சிக்க மாட்டோம்" என்று நீங்களும் சொல்ல முடியாது, நாங்களும் கேட்க முடியாது.

நாங்கள் day-to-day administration-ஐச் சொன்னால்... இவ்வளவு கொலை நடக்கிறது, கொள்ளை நடக்கிறது, இவ்வளவு பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன என்று சொன்னால், நீங்கள் உடனே முந்தைய அரசை விமர்சிக்கிறீர்களா? நீங்கள் சொன்னீர்களே, "நான் வந்த உடனே எல்லாம் சரியாகிவிடும்" என்று. சரி, பணம் இல்லை, நிதிநிலைமையைச் சீர் செய்வதற்கு ஆறு மாதம் ஆகலாம் அல்லது இரண்டு வருடம் ஆகலாம். சட்டம் ஒழுங்குக்கு என்ன பிரச்சனை? போலீஸ் உங்களிடம் தானே இருக்கிறது? துப்பாக்கி உங்கள் கையில் தானே இருக்கிறது? Transferring authority நீங்கதானே? அதற்கு என்ன கால அவகாசம் வேண்டும் என்று கேட்கிறேன்? உளவுத்துறையைச் சரியாக வைத்திருக்க வேண்டியதுதானே நீங்கள்?

உங்களுடைய உரையில் அப்புறம் வேறு என்னவெல்லாம் சொல்கிறீர்கள்? இப்போது தமிழ்நாட்டுக்கு அவர் கையெழுத்துப் போட்டதில் "சிங்கப்பெண்" என்று ஒரு திட்டத்திற்கு உங்களின் முதல் கையெழுத்தைப் போட்டீர்கள். நான் கேட்கிறேன், "சிங்கப்பெண்" திட்டத்திற்கு budgetary support என்ன? கலைஞர் மூன்று கையெழுத்துப் போட்டார், எங்களுடைய தலைவர் ஸ்டாலின் முதல் கையெழுத்துப் போட்டார் முதலமைச்சராக வரும்போது. அதற்கெல்லாம் budgetary support என்ன என்று நிதித்துறை செயலாளரோடு பேசி, நிதி ஒதுக்கீடு செய்து முடித்த பிறகுதான் கையெழுத்துப் போடுவோம். "சிங்கப்பெண்" திட்டத்திற்கு budget allocation என்ன? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், பெயரை மட்டும் மாற்றிவிட்டால் போதுமா?

ஒரு IG-யைப் போட்டீர்கள், புதிதாக recruit பண்ணினீர்களா? அதற்குப் புதிதாக department வாங்கிக் கொடுத்தீர்களா? அல்லது எந்தெந்த மாவட்டத்தில் "சிங்கப்பெண்" திட்டத்திற்குப் போலீஸ் allot ஆகியிருக்கிறார்கள்? எத்தனை வாகனங்கள் நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள்? அதை ஏன் என்னை விவாதிக்க வைக்கவில்லை? கையெழுத்துப் போட்டீர்களே, ஏன் என்னை விவாதிக்க வைக்கவில்லை என்று கேட்கிறேன். உங்களை "inability, incompetent" என்று நான் சொல்வதில் என்ன தப்பு? ஆனால் நீங்கள் பேசுவதைப் பார்த்தால், கைதட்டலுக்காக, உணர்ச்சியைத் தூண்டுவதற்காக எல்லாம் பண்ணுகிறீர்களா?

நாங்கள் என்ன சக்தி தெரியுமா? மும்மொழிக் கொள்கையை நாங்கள் உள்ளே விடவில்லை. என்னென்ன திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம்! Delimitation-ஐ நாங்கள் தான் நிறுத்தினோம். National Education Policy-யை நாங்கள் தான் நிறுத்தினோம். PM-SHRI திட்டத்தில் 2500 கோடி இழந்தாலும் பரவாயில்லை, 10000 கோடி நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, "மாநில உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன்; மோடி அவர்களே, நான் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்" என்று சொன்னவர் தூர சக்தியாம், ஓர சக்தியாம், கோர சக்தியாம், பார சக்தியாம், தூர்ந்துபோன சக்தியாம்!

Bro Vijay, bro... எங்கே bro போச்சு உங்களுடைய சக்தி? பிரதமர் முன்னாடி "முடியாது" என்று சொல்லிட்டு வாங்க bro. ஏன் bro, மாண்புமிகு முதலமைச்சர் bro, ஏன் பேசாமல் வந்தீர்கள்? ஏன் bro, பிரஸ்ஸைப் பார்ப்பதற்கு உங்களுக்குத் தைரியம் இல்லை? ஏன் bro, எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டுக்கு இவ்வளவு நேரம் வீரம்?

உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கு! "பாசிசத்தையும் எதிர்க்கிறோம், பாயாசத்தையும் எதிர்க்கிறோம்" என்றீர்கள். ரைட், பாயாசத்தை முடித்துவிட்டீர்கள்; பாசிசம் என்ன ஆயிற்று bro? திருவள்ளுவருக்குக் காவி உடை, காவி கலர் போட்டிருக்கிறார் கவர்னர். உங்களிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம்" என்கிறீர்கள். எப்போது பேசுவீர்கள்? திருவள்ளுவர் எங்களுடைய இனத்தினுடைய, மொழியினுடைய, கலாச்சாரத்தினுடைய அடையாளம். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று emblem போட்டுக்கொண்டால் பத்தாது. திருவள்ளுவருக்கு இங்கே காவி சாயம் பூசும்போது, "நான் இப்போது பேச மாட்டேன்" என்று சொன்னால், எங்களுடைய மொழியையும் இனத்தையும் தாழ்த்துகிற ஒருவரைக் கேள்வி கேட்பதற்குத் துப்பு இல்லாத ஒரு சக்தி, எங்களைப் பார்த்துத் தீய சக்தி, தூர சக்தி என்று சொல்லுவீங்களா? நீங்கள் என்ன சக்தி? நார சக்தியா? கேட்க மாட்டோமா?

அப்புறம் நாங்கள் சாதி, மதம், பணத்தையெல்லாம் உடைத்துவிட்டோம் என்கிறீர்கள். நீங்கள் சாதி பார்த்து candidate-ஐப் போடவில்லையா? நீங்கள் மதமே பார்க்கவில்லையா? கையில் ஒரு மதம், நெற்றியில் ஒரு மதம்... பதவி ஏற்கும்போது "ஜோசப் விஜய் என்னும் நான்..." அது ஒரு மதம். என்ன bro, total contradiction bro! Bundle of contradictions! இந்த bundle of contradictions-ஐத் தாண்டி வந்துவிட்டீர்கள் அல்லவா? அதையெல்லாம் உள்ளே மறைத்துப் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதைவிடப் பெரிய கொடுமை, திருச்சி கிழக்கு தொகுதி வந்து, "என்னுடைய செல்லப் பிள்ளை..." ஐயோ ஜனங்களே ஜாக்கிரதையாக இருங்கள்! நான் இப்போது கேட்கிறேன், இதெல்லாம் ஒரு chief minister-இன் பிரச்சனையா? ஒரு chief minister-க்கு முன்னாடி என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன? தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய உரிமைகளை நீங்கள் வாங்கினீர்களா?

இன்றைக்குப் பக்கத்து மாநிலத்தினுடைய துணை முதலமைச்சர் D.K. Shivakumar பேசியிருக்கிறார்: "திமுக-வும் ஸ்டாலினும் இருக்கிற வரைக்கும் தான் எங்களுக்குப் பிரச்சனை, மேகதாது அணை கட்டுவதற்கு இனிமேல் எங்களுக்குப் பிரச்சனை இல்லை" என்கிறார். இதைக் கேட்டதற்குப் பிறகு, காங்கிரஸ்கார்கள் இங்கே இருக்கிற இரண்டு அமைச்சர்கள் அதற்குத் தான் எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்களா? முதலமைச்சர் அவர்களே, உங்களைச் சொல்கிறார், நீங்கள் ஒரு ஆளே இல்லை என்கிறார் அவர்; "எங்களுக்குப் பிரச்சனையே இல்லை" என்கிறார். D.K. Shivakumar-க்கு உங்கள் பதில் என்ன?

அப்புறம் பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு சொன்னீர்களே, நான் விவசாயி மகனாகப் பிறக்காமல் இருப்பதற்கு வருத்தப்பட்டேன் என்று.. நான் விவசாய வீட்டுப் பிள்ளை, எட்டாவது பிள்ளை, நான் கடைசிப் பிள்ளை, எனக்கு ஏர் ஓட்டத் தெரியும், தண்ணீர் பாய்ச்சத் தெரியும், உழவு தெரியும், வண்டி மாடு ஓட்டியிருக்கிறேன், எல்லாம் பண்ணியிருக்கிறேன்" என்று. நீங்கள், "ஐயயோ, எனக்கு விவசாயப் பிள்ளையாகப் பிறக்காமல் போய்விட்டதே" என்றீர்களே, இன்றைக்குப் பார்த்தீர்களா டிவியில்? விவசாயிகள் போராடுகிறார்கள், "பிணமாக நடித்துக்கொண்டு போராடுகிறோம், இந்த ஆட்சியில் நாங்கள் பிணமாகிக் கொண்டிருக்கிறோம்" என்று.

இன்னொன்று கேட்கிறேன், "எங்களை ஆறு மாதம் கேள்வி கேட்காதீர்கள்" என்று சொன்னீர்களே, நீங்கள் ஆறு மாதம் அல்ல, ஆறு வருடம் கூடக் கேள்வி கேட்க வேண்டாம். உங்களுடைய தேர்தல் அறிக்கையில் உங்களுடைய நடத்தை, நாணயம் இருக்கிறதா? Reserve Bank guidelines இல்லாமல் நீங்கள் விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய முடியாது. 2025 guidelines இருக்கும்போது, நீங்கள் 2026-இல் தானே தேர்தல் அறிக்கை தயாரிக்கிறீர்கள்? அந்த அறிக்கை தயாரிக்கும்போது இப்படி ஒரு சட்டம் இருப்பது என்பது தெரியாமல் கூட ஒரு அரசியல் கட்சி தேர்தல் அறிக்கை கொடுத்தால், உங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்? "ரொம்ப கல்வியாளர்கள்" என்று பெயர் வச்சிடலாமா? "மெத்த படித்தவர்கள்", "பேரறிவாளர்கள்", "ஞானிகள்" என்று பெயர் வச்சிடலாமா? நீங்களே ஒரு வார்த்தையைச் சொல்லுங்களேன்! அப்போ நீங்களே ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, அதை முடிக்க முடியாமல் இப்போது புதுப்புது நிபந்தனைகள் வைக்கிறீர்கள் 200 யூனிட் மின்சாரத்திற்கு!

அப்புறம் கச்சத்தீவு... கச்சத்தீவு வந்து நீண்ட நாள் எங்களுடைய தமிழருடைய பிரச்சனை, மீனவருடைய பிரச்சனை. "அதைக் கேட்டிருக்கிறேன்" என்று சொல்லுங்கள், "கேட்போம்" என்று சொல்லுங்கள், "போராடுவோம்" என்று சொல்லுங்கள், ஒத்துக்கொள்கிறோம். அதில் அரசியல் சட்டச் சிக்கலே இருக்கிறது. தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய, சட்டமன்றத்தினுடைய அனுமதி இல்லாமலேயே அன்றைக்குக் கச்சத்தீவை மத்திய அரசாங்கம் தாரை வார்த்தது. அதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, கலைஞர் தலைமையில் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு கண்டித்திருக்கிறது. எல்லாம் ஆவணங்களாக இருக்கின்றன. உடனே நீங்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஆனால் குறைந்தபட்ச ஒரு accountability வேண்டாமா? உங்க அமைச்சர்களுக்கு என்ன அமைச்சர்கள் அவர்கள்? கச்சத்தீவைப் பற்றிப் பேசினால் "No comments". திருவள்ளுவர் சிலைக்கு ஏன் காவி சாயம் அடிக்கிறார் கவர்னர் என்று கேட்டால், "அதை இப்போது பேச வேண்டாம்" என்கிறார்கள்.

பக்ரீத்துக்கு ஒரு judgment வந்திருக்கிறது, எங்கள் கட்சியின் சார்பில் சரவணன், கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி எல்லாம் அதைக் கண்டித்திருக்கிறார்கள். நீங்கள் என்ன பேசியிருக்கிறீர்கள்? "மாநில உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று போனீர்களே, பிரதமரிடம் என்ன கேட்டு வந்தீர்கள்? "மதச்சார்பின்மையை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றீர்களே, இந்த judgment-இல் உங்களுடைய பதில் என்ன? உங்கள் comments என்ன? Appeal போகப் போகிறீர்களா, என்ன பண்ணப் போகிறீர்கள்? எதுவுமே இல்லையே!

இப்படி இந்த electricity bill, இன்றைக்கு electricity scarcity-க்கு திமுக ஆட்சி மேல் பழி போடுகிறீர்களே, ஏன்? கோடைகாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் back records இருக்கின்றன. ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதத்தில் தமிழ்நாட்டில் எவ்வளவு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்பதற்கு ஜெயலலிதா காலத்திலிருந்து, எங்களுடைய காலத்திலிருந்து, எடப்பாடி காலத்திலிருந்து back record, track record இருக்கிறது. வழக்கமாக ஒரு அரசாங்கம் என்ன பண்ணும் என்றால், எந்தப் பருவக்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் என்பதை முன்கூட்டி அறிந்து அதற்கான கூடுதல் மின்சாரத்தைப் பெற வேண்டும். கூடுதல் விலையாக இருந்தால் கூட அதையும் சேர்த்து அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, "வேறு வழி இல்லை, நாங்கள் வாங்குகிறோம்" என்று சொல்ல வேண்டும். அதைச் செய்வதற்குக் கூடத் துப்பு இல்லை உங்களுக்கு! கரண்ட் இப்போது போய்விட்டது என்றால் காரணம் ஸ்டாலின் என்கிறீர்கள், திமுக என்கிறீர்கள்.

Bro, Chief Minister, Honorable Vijay bro... really we are afraid, bro! எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை bro. தூக்கம் வரமாட்டேங்குது bro. ஒன்றுமே சரியில்லையே bro. தொலைநோக்குத் திட்டமும் ஒன்றும் கிடையாது, day-to-day administration-உம் ஒன்றும் கிடையாது. என்ன பண்றதுன்னு தெரியல bro. ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுங்கள் bro, இல்லைன்னா நல்லா இருக்காது bro.

எங்களுடைய தலைவர், எங்களுடைய திமுக, திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுடைய நியாயமான எல்லாச் செயல்களுக்கும் உடன்நிற்கத் தயாராக இருக்கிறது.

முதிர்ச்சி இல்லாமல், முன்னனுபவம் இல்லாமல் போவதில் தவறில்லை, ஆனால் முதிர்ச்சி இல்லாத, பக்குவம் இல்லாத, எதைப் பற்றியும் சிந்திக்காத ஒரு தாந்தோன்றித்தனமான அரசாங்கத்தைத் தந்துகொண்டிருக்கிற முதலமைச்சர் அவர்களே... உங்களைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாக்களித்த மக்களின் சார்பில், வாக்களிக்காத மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அப்புறம் சொல்கிறீர்கள், "ஒரே தலைவர், ஒரே நம்பிக்கை நான் தான்" என்று. உங்களுக்கு ஓட்டு போட்டது 35% தான். Parliamentary democracy, I admit. நாடாளுமன்ற தேர்தல் முறையில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ஆனால் "தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தான் தலைவன்" என்று சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, எந்த அனுமதியும் இல்லை. ஏனென்றால், 65% பேர் உங்களை வேண்டாம் என்று ஓட்டு போட்டிருக்கிறார்கள். Electoral policy-படி அதுதான் சரி என்று நான் சொல்லவில்லை, அரசியல் சட்டப்படி அதுதான் சரி. ஆனால் மனதிலே வைத்துக்கொள்ளுங்கள், உங்களை வேண்டாம் என்று நிராகரித்தவர்கள் 65% பேர் இருக்கிறார்கள். அந்த 65%-த்தில் இன்னும் ஒரு 10, 15 சதவீதமாவது உங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு முயற்சி எடுங்கள். எங்களை, எங்கள் தலைவரை எப்போது பார்த்தாலும் குறை சொல்லி, அதிலே எள்ளலும் துள்ளலுமாகப் பேசி, நக்கல் நையாண்டி பேசி, உங்களுடைய முதலமைச்சர் என்ற நாற்காலிக்குரிய தகுதியைக் குறைத்துக்கொள்ளாதீர்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories