
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோவை, சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முகம், கண் சிதைக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த மனிதநேயமற்ற கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்த மிருகத்தனமான குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டணை பெற்றுத் தர வேண்டுமெனவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காவல்துறை உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், சிறுமியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
சிறுமியை இழந்து சொல்லொணா துயரங்களுடன் தவிக்கும் பெற்றோர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.






